

அடுத்த ஆண்டுக்குள் 5 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் நல தலைமை ஆணையர் கமலேஷ் குமார் பாண்டே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாற்றுத்திறனாளிகளின் மேம் பாட்டுக்காக மத்திய மாற்றுத் திறனாளிகள் அதிகாரம் அளிக்கும் துறை பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகளின் குறைகளைத் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நடமாடும் நீதிமன்றங்கள் இயங்குகின்றன. இதில் மாற்றுத்திறனாளிகள் குறை களைத் தெரிவிக்கலாம். இக் குறைகள் சம்பந்தப்பட்ட துறையின் கவனத்துக்கு உடனடியாக கொண் டுச் செல்லப்பட்டு விரைந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படு கின்றன. மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளை இ-மெயில் (ccpd@nic.in) மூலமாகவும் தலைமை ஆணையருக்குத் தெரியப்படுத்தலாம்.
திறன் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 2018-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் 2022-க்குள் 25 லட்சம் பேருக்கும் பயிற்சி அளிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை 44 ஆயிரம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரிக்கப்பட இருக்கிறது. இதுதொடர்பான சட்டம் நடைமுறைக்கு வரும் போது மாற்றுத்திறனாளிகள் அதிக நன்மைகள் பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.