Published : 01 Sep 2016 03:00 PM
Last Updated : 01 Sep 2016 03:00 PM

வடகிழக்கு பருவமழையால் பாதிக்காமல் இருக்க சம்பா நேரடி விதைப்பு பணியை துரிதப்படுத்த வேண்டும்



டெல்டா விவசாயிகள் வலியுறுத்தல்

வடகிழக்குப் பருவமழையில் பயிர்கள் பாதிக்காமல் இருக்க காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா நேரடி நெல் விதைப்புப் பணிகளை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் முடிக்க வேளாண் துறை திட்டமிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில், குறுவை சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆயினும், சம்பா, தாளடி சாகுபடிக்கு அணை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு குறுவையைத் தொடர்ந்து சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் திறக்க இயலாத நிலையில், தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் உள்ளது.

இந்நிலையில், டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா சாகுபடி மேற்கொள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ், ஆகஸ்ட் 18-ம் தேதி ரூ.64.30 கோடி மதிப்பில் சம்பா தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார்.

இதன்படி, நிலத்தை உழவு செய்ய, விதை, களைக்கொல்லி, துத்தநாக சத்து உரம் ஆகியவை வாங்க, இயந்திரம் மூலம் நேரடி விதைப்பு செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்க இத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நேரடி விதைப்பு சாத்தியமா?

பொதுவாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நாற்று விட்டு, நடவு செய்வதுதான் வழக்கமான சாகுபடி முறை. சில மேட்டுப்பாங்கான இடங்கள் மற்றும் தண்ணீர் மிகவும் குறைவாக கிடைக்கும் பகுதிகளில் மட்டுமே நேரடி விதைப்பு கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுவாகவே நேரடி விதைப்பு செய்யப்படும் வயல்களில் பயிர்களுடன் சேர்ந்து களைகளும் அதிக அளவில் முளைத்துவிடும். களை எடுக்கவே அதிக அளவில் பணம் செலவிட வேண்டியிருக்கும் என்பதும் விவசாயிகளின் குழப்பத்துக்கு காரணம். இதில் தேவையான வழிகாட்டுதல்களை வேளாண் துறையினர் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செப்.15-க்குள் விதைப்பு பணி…

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம், ‘தி இந்து’விடம் கூறியபோது, “சம்பா பருவத்தில் வழக்கமாக 145-150 நாள் வயதுடைய நீண்ட கால ரகங்களையே விவசாயிகள் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், தற்போது பருவம் தவறிப் போவதால் 135 நாள் வயதுடைய மத்திய கால ரகங்களைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது. இந்த விதைகளை வழங்க வேளாண் துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விதைப்புப் பணிகளை முடித்தால் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்போது பயிர்கள் நன்கு வளர்ந்துவிடும்.

பெருமழை, வெள்ளம் ஏற்பட்டாலும் அதில் பாதிக்காமல் பயிர்களைக் காப்பாற்ற முடியும்” என்றார்.

தமிழக அரசு அறிவித்த குறுவை தொகுப்புத் திட்டத்தால் வழக்கமான பரப்பை விட கூடுதலாக இந்த ஆண்டு நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. அதேபோன்று சம்பா பருவத்திலும் விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்க, உரிய காலத்தில் விதைப்புப் பணிகளை முடிக்க அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்பதுதான் டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

வறட்சி, வெள்ளத்தை தாங்கி வளரும் புதிய நெல் ரகங்கள் வேண்டும்

ஆறுபாதி கல்யாணம் மேலும் கூறியபோது, “வறட்சி மற்றும் வெள்ளத்தை தாங்கி வளரும், வலுவான தண்டு கொண்ட மத்திய கால நெல் ரகங்களைக் கண்டறியும் பணியை வேளாண் பல்கலைக்கழகம் முடுக்கிவிட வேண்டும். இதுபோன்று தண்ணீர் பற்றாக்குறையுள்ள இடர்பாடு காலகட்டங்களில் விவசாயிகளுக்கு நல்ல மகசூல் வழங்கும் ரகங்களின் தேவை மிக முக்கியமானது.

தரிசு நிலத்தை புழுதி உழவு செய்ய ஏக்கருக்கு ரூ.500 என்பதை ரூ.2,000 என உயர்த்தி வழங்க வேண்டும் . மானியத்தில் விதை வழங்குவதை மேலும் அதிகப்படுத்த வேண்டும். துத்தநாக சல்பேட் உரத்துக்கு மட்டுமன்றி நுண்நூட்டச்சத்து உரங்களையும் வழங்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x