

வாகன விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் சென்னை போக்குவரத்து போலீஸார் தயாரித்துள்ள விழிப் புணர்வு பாடலை சமூக வலைதளங்களில் இதுவரை 15.76 லட்சம் பேர் கேட்டு ரசித்துள்ளனர்.
வாகன விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான பாடல் அடங்கிய குறுந்தகடை சென்னை போக்குவரத்து போலீஸார் தயாரித் தனர். பின்னணி பாடகர் ‘கானா’ பாலா இந்த விழிப்புணர்வு பாடலை எழுதி பாடியிருந்தார். இயக்குநர் நிரஞ்சன் இயக்கியுள்ளார்.
இந்த விழிப்புணர்வு பாடல் அடங்கிய குறுந்தகடை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சமீபத்தில் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இப்பாடல் பகிரப்பட்டன. இந்தப் பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று வரை இந்தப் பாடலை 15 லட்சத்து 76 ஆயிரத்து 787 பேர் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘போக்குவரத்து போலீஸாரின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த விழிப்புணர்வு பாடலை 20 ஆயி ரம் பேர் கேட்டுள்ளனர்.
யூ-டியூபில் 6,787 பேர், பிஹைண்ட் வுட் என்ற சமூக ஊடகத்தில் 4.5 லட்சம் பேரும், ‘சற்றுமுன்’ என்ற ஃபேஸ்புக்கில் 11 லட்சம் பேரும் கேட்டுள்ளனர்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.