

சென்னை மாநகரில் உள்ள முக்கிய பஸ் நிறுத்தங்களில், ஆட்டோக்கள் நின்று பயணிகளை ஏற்றுவதைத் தடுக்க, 120 அதிகாரிகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் நியமித்துள்ளது. போலீசார் ஒத்துழைக்காததால் தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள மாநகர பஸ் நிறுத்தங்களில் காலை மற்றும் மாலையில் நெரிசல் நேரங்களில் கூட்டம் நிரம்பி வழியும். அதுபோன்ற நேரங்களில், பஸ்ஸை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பயணிகளை ஏற்றிச் செல்ல ஆட்டோ டிரைவர்களும், ஷேர் ஆட்டோ டிரைவர்களும் போட்டி போடுவது வழக்கம்.
ஆட்டோக்களால் அவதி
இவ்வாறாக, பயணிகளை ஏற்றிச் செல்ல வரும் ஆட்டோ டிரைவர்கள், தங்களுக்கு சவாரி கிடைக்கும் வரையில் பஸ் நிறுத்தங்களிலேயே வாகனங்களை நிறுத்தி வைப்பார்கள். இதனால் அந்த நிறுத்தத்துக்கு வரும் பஸ்கள் நிற்க இடமில்லாமல் நடுவழியில் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றப்படுகிறார்கள். இதனால் சாலைகள் அடைபட்டுப்போகின்றன.
அதோடு பஸ்களை சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் டிரைவர்கள் மீது பொதுமக்களின் கோபம் தேவையின்றி திரும்புகிறது. சில நேரங்களில் சாலையின் நடுவில் பஸ்ஸை நிறுத்தாமல், பஸ் நிறுத்தத்தில் இருந்து பல மீட்டர் தூரத்தில் பஸ்களை டிரைவர்கள் நிறுத்த வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
போலீசிடம் சொல்லியும் பயனில்லை
இது குறித்து போலீசாரிடம் மாநகரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பல தடவை புகார் செய்துள்ளனர். ஆனால், பஸ் நிறுத்தங்களில் இருந்து ஆட்டோக்களை அகற்ற போலீ சாரிடமிருந்து போதுமான ஒத்துழைப்பு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நகரில் உள்ள 120 முக்கிய பஸ் நிலையங்களின் அருகில் போக்குவரத்தை காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளில் சீர் செய்ய தங்களது அதிகாரிகளையே மாநகர போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தியுள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து அதி காரி ஒருவர் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:-
நெரிசலான நேரங்களில் பஸ் நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்துவதால், பஸ்களை சாலையின் நடுவில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பல நேரங்களில் அப்பாவி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். ஆட்டோக்களை நிறுத்தங்களில் நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடம் பலமுறை சொல்லியும் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அதனால் முக்கிய நிறுத்தங்களில் நாங்களே காலை மற்றும் மாலை நேரங்களில் நடத்துனர்களை நிறுத்தியுள்ளோம். இத்திட்டத்துக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்”
இவ்வாறு அவர் கூறினார்.
அதேநேரத்தில், தங்களுக்கு இந்த பணி அளித்திருப்பது தண்டனை விதிக்கும் வகையிலானது என சில நடத்துனர்கள் புலம்புகின்றனர்.