புத்தாண்டில் ரூ.250 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை

புத்தாண்டில் ரூ.250 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை
Updated on
1 min read

புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூலம் ரூ.250 கோடி அளவுக்கு டாஸ்மாக் மதுவிற்பனை நடந்துள்ளது.

பண்டிக்கைக்கால கொண்டாட் டத்தின் ஒருபகுதியாக மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருவது கவலை தரும் செயலாகும். குறிப்பாக தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மது விற்பனை அதிக அளவில் நடக்கிறது. எப்போதாவது ஒரு முறை மது அருந்துவோர் கூட பண்டிகை காலங்களில் நண்பர்களுடன் மதுகுடிப்பதாலேயே மது விற்பனை அதிகரிக்கிறது.

இந்த புத்தாண்டுக்கு முதல் நாளான செவ்வாய்க்கிழமை (டிச.31) மட்டும் தமிழகம் முழுவதும் ரூ.135 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதுபோல், புத்தாண்டு தினமான புதன்கிழமை மாலை நிலவரப்படி ரூ.120 கோடியைத் தொட்டது. இரவு 10 மணிக்குள் அது மேலும் சில கோடிகளைத் தாண்டியிருக்கும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமான நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.75 கோடிக்கும், வார இறுதி நாள்களில் ரூ.90 கோடி அளவுக்கும் மது விற்பனை ஆகிறது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:

புத்தாண்டுக்கென மதுவிற்பனைக்கு இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை. எதிர்பார்த்தபடி இந்த ஆண்டு ரூ.250 கோடி அளவுக்கு விற்பனை ஆகியுள்ளது. கடந்த புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களின்போது ரூ.200 கோடியும் பொங்கல் பண்டிகையின்போது ரூ.300 கோடியும் தீபாவளியின்போது ரூ.300 கோடிக்கு அதிகமாகவும் விற்பனை ஆனது.

அதேநேரம் 2011 புத்தாண்டில் ரூ.71 கோடியும், 2010-ல் ரூ.54 கோடிக்கும் விற்பனையானது. இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தன்று மட்டும் ரூ.125 கோடியைத் தொட்டிருக்கிறது. கடந்த ஆண்டைவிட மது விற்பனை வருமானம் அதிகம்.

அதுபோல், கடந்த ஆண்டை விட பீர்- 8 சதவீதம், மதுவகை - 6 சதவீதம் அதிகரித்துள்ளது. விலை உயர்வு காரணமாக மது விற்பனையால் வருமானம் அதிகரித்து வந்தாலும், சமீபகாலமாக மதுவின் அளவு (வால்யூம்) குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in