எம்.ஜி.ஆர். புகழ் காலத்தை வென்று நிற்கும்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகழாரம்

எம்.ஜி.ஆர். புகழ் காலத்தை வென்று நிற்கும்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகழாரம்
Updated on
3 min read

சென்னை விருகம்பாக்கத்தில் 1967 ஜனவரி 1-ம் நாள், நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாட்டின் நிறைவு நாள் பேருரையில், பேரறிஞர் அண்ணா, ‘‘என் இனிய நண்பர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், கழகத்திற்கு நிதி தருவதாகச் சொன்னார். நிதி வேண்டாம். உங்கள் முகத்தைக் காட்டினால் தொகுதிக்கு 30 ஆயிரம் வாக்குகள் அதிகமாகக் கிடைக்கும்” என்று கூறியபோது, மண்தரையில் அமர்ந்து இருந்த மக்கள் கடல் விண்ணதிர ஆரவாரம் செய்தது. அப்படிக் கைதட்டியவர்களுள் ஒரு வன்தான், அப்போதைய சட்டக் கல்லூரி மாணவனாகிய நான்.

1967 தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்ட பொன்மனச் செம்மல், பிரச்சாரம் முடிந்து நண்பகல் தாண்டி வீடு திரும்பியபோது, அவரை சந்திக்க வந்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார். காட்டுத் தீயெனச் செய்தி பரவியபோது கலங்கிப் போய், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நோக்கி ஓடியவர்களுள் நானும் ஒருவன்.

அந்த நேரத்தில், தேர்தல் களத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்ற தோற்றத்தில், கழுத்தில் கட்டுப்போட்டு அமர்ந்து இருக்கின்ற படம், தமிழகமெங்கும் வாக்காளர்களிடம் திமுக ஆதரவு அலையாக எழுந்ததை, அக்களத்தில் நேரடியாகக் கண்டேன்.

எம்.ஜி.ஆர். என்ற மாமனிதரை, மனிதநேயத்தின் சிகரமாக, மானசீக மாகப் போற்றினேன். 1971 பொதுத் தேர்தலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பிரச்சாரத்திற்கு வந்த போது, அவரை வரவேற்று எல்லை யில் இருந்து காரில் பின்தொடர வேண்டும் என்று இராஜபாளையம் சாலையில் காத்திருந்துவிட்டு இரவு ஒரு மணிக்கு மேல் அங்கிருந்து புறப்பட்டு இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் வழியாகச் சிவகாசிக்குச் சென்றேன்.

அங்கே நண்பர் காளிமுத்துவை ஆதரித்து அதிகாலை 2.30 மணிக்கு எம்.ஜி.ஆர். பேசினார். லட்சக் கணக்கான மக்கள் கடல். சங்கரன் கோவில், ராஜபாளையம், திரு வில்லிபுத்தூர் என வழிநெடுகிலும் நடுச்சாமத்திற்குப் பின்னரும் லட்சக்கணக்கான மக்கள் எம்.ஜி.ஆரின் முகத்தைப் பார்க்கக் காத்துக் கிடந்ததைக் கண்டு, வியப்பின் உச்சிக்கே சென் றேன். இராஜபாளையம் கூட்டம் முடிந்து அதிகாலை 4.00 மணிக்கு சங்கரன்கோவிலுக்கு வர வேண்டி யவர், அங்கிருந்து திரும்பி மதுரைக் குப் போய்விட்டார். பாண்டியன் ஓட்டலில் ஓய்வு எடுத்தார்.

மறுநாள் மாலையில் எப்படியும் அவரை நெல்லை மாவட்டத்திற்கு அழைத்து வந்து விடவேண்டும் என்று நான், வெள்ளத்துரைப் பாண்டியன், கா.மு. கதிரவன், ஆலடி அருணா ஆகியோர், பகல் 12 மணிக்கு எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் அவரது அறைக்குச் சென்றோம். ‘‘நான் நெல்லை மாவட்டச் சுற்றுப் பயணத்திற்கு வந்தால், அடுத்த மூன்று மாவட்டங்களுக்குப் பிரச்சாரத்திற்குச் செல்ல முடியாமல் போய்விடும். எனவே, வர வாய்ப்பு இல்லை’’ என்றார்.

அவரைப் பார்த்து “உங்கள் முக தரிசனத்திற்காகவே மக்கள் ஏங்குகிறார்கள். நீங்கள் எங்கும் ஐந்து நிமிடங்களுக்குமேல் பேச வேண்டாம். மக்கள் வழிநெடுகிலும் விடிய விடிய ரோட்டில் காத்துக் கிடக்கிறார்கள்” என்றேன். என்னை உற்றுப் பார்த்தார். “சுற்றுப் பயணத்தை ரத்து செய்ய மனம் இல்லை. அதோ, சோபாவில் உடைகள் இருக்கின்றன பாருங்கள். நான்கு மணிக்குப் புறப்படுகிறேன்” என்றார். 3.50 மணிக்கெல்லாம் மஞ்சள் நிற சில்க் ஜிப்பாவில் ஒளிப் பிரகாசமாகப் பிரச்சார வேனுக்கு வந்தார்.

சங்கரன்கோவிலில் வேனில் கையை அசைத்தபடி வந்த காட்சியை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. அந்தத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைத் தி.மு.கழகம் பெற்றது. 1962, 1967 பொதுத் தேர்தல்களின் தி.முக.வின் பல வேட்பாளர்களுக்கு எம்.ஜி.ஆர். திரைத்துறையில் தான் சம்பாதித்த பணத்தை அள்ளிக் கொடுத்தார் என்ற உண்மையை மனச்சாட்சி உள்ள தி.மு.க.வினர் மனதளவில் ஒப்புக் கொள்வார்கள்.

1972 -ம் ஆண்டு தலைமைக் கழகத்திற்குச் சென்று பொருளாளர் என்ற முறையில் வரவு செலவுக் கணக்கைக் கேட்டபோது, அதற்குக் கிடைத்த பதில் எம்.ஜி.ஆருக்கு ஆத்தி ரத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, அக்டோபர் 8-ம் நாள் லாயிட்ஸ் சாலையிலும், திருக் கழுக்குன்றத்திலும் தி.மு.க. மேடைகளில் பேசிய எம்.ஜி.ஆர்., திமுகவினர் அனைவரும் சொத்துக் கணக்கைக் காட்டவேண்டும் என்று பேசினார். எம்.ஜி.ஆர். மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்கிறது என்று அக்டோபர் 10-ம் தேதி சேப் பாக்கம் அரசு விருந்தினர் விடுதி யில் எடுக்கப்பட்ட முடிவை வாசலில் காத்திருந்த என்னிடம் நாவலர் சொன்னபோது, என் இருதயம் நொறுங்கிப் போயிற்று. ஆழிப் பேரலை போல் எம்.ஜி.ஆர். ஆதரவு அலை தமிழகமெங்கும் வீசியது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 9000 ரூபாய் வருமான வரம்பைத் திரும்பப் பெற்று, பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 31 சதவிகிதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவிகித மாக உயர்த்தி, ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டை 68 சதவிகிதமாக தமிழ்நாட்டில் ஆக்கித் தந்த சமூக நீதியின் காவலர் ஆவார்.

தந்தை பெரியார் அவர்களுக்கு நூற்றாண்டு விழா எடுத்து, ஆண்டு முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாடியதோடு, பெரியார் அவர்களின் தமிழ் மொழி எழுத்துச் சீர்திருத்தத்தைத் தமிழக அரசு ஏற்றதோடு, அதற்கான அரசு ஆணையும் பிறப்பித்து, எல்லையற்ற புகழைக் குவித்தவர் எம்.ஜி.ஆர்.! மாவட்டந்தோறும் பகுத்தறிவுப் பகலவனின் நினைவுத்தூணையும் நிறுவிக் காட்டினார்.

ஈழத்தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்குத் தருகிறோம் என்று வெளிப்படையாகக் காசோலை மூலம் 4 கோடி ரூபாயை எம்.ஜி.ஆர். கொடுத்தார். அதன் பின்னர் மேடை களில் எம்.ஜி.ஆர் அவர்களை விமர்சிப்பதை அடியோடு நிறுத்திக் கொண்டேன். பிரதமர் ராஜீவ் காந்திக்கு அமெரிக்காவில் மருத்துவ மனையில் இருந்து எம்.ஜி.ஆர். அனுப்பிய கோரிக்கை மனுவின் நகலைப் பெற முயற்சித்துக் கொண்டு இருக்கின்றேன். மரண வாயிலில் தான் இருந்தபோதும் ஈழத்தமிழர்களை, விடுதலைப்புலி களைப் பாதுகாக்கத் துடித்த எம்.ஜி.ஆர் என்ற அந்த மூன்றெழுத்து மந்திரம், ஈழத்தமிழர்களின் இதயச் சுவரில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டு விட்டது.

யுகயுகாந்திரங்களுக்கும் மாமனிதர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பெயர் நிலைத்து நிற்கும்!

நூற்றாண்டு பிறந்த நாள் காணும் விழா நாயகர் எம்.ஜி.ஆர்.!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in