

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் 2 நாள் தேசிய நெல் திருவிழா நேற்று தொடங்கியது.
11-ம் ஆண்டு தேசிய நெல் திருவிழாவையொட்டி நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சிக்கல் அம்பலவாணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நெல் இரா.ஜெயராமன் முன்னிலை வகித் தார். நபார்டு வங்கி முதன்மைப் பொதுமேலாளர் நாகூர் அலி ஜின்னா சிறப்புரையாற்றினார்.
பாரம்பரிய விதை நெல்கள்
நிகழ்ச்சியில், திருவாரூர் ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல்களை வழங்கினார். நமது நெல்லை காப்போம் அமைப்பின் கேரளா மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.ஸ்ரீதர், உஷாகுமாரி, கிரியேட் நிர்வாக அறங்காவலர் பொன்னம் பலம், திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மயில்வாகனன், காவிரி உரிமை மீட்புக்குழுத் தலைவர் மணியரசன், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவர் ஏ.வி.துரைராஜ், நெல் உற்பத்தியாளர் சங்கத் தலை வர் பாலகிருஷ்ணன் மற்றும் தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலங் கானா, புதுச்சேரி ஆகிய 5 மாநி லங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர்.
விழாவில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களும் ஏராளமானோர் கலந்துகொண்ட னர்.
நிகழ்ச்சியில், பருவநிலை மாற்றமும் பூச்சிகளும், பாரம்பரிய நெல் சாகுபடியும் அதன் மருத்துவ குணங்களும், பருவநிலை மாற்ற மும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களும் ஆகிய தலைப்பு களில் கருத்தரங்கம் நடைபெற்றது.
நெல் திருவிழாவையொட்டி விழா அரங்கில் இடம்பெற்ற கண்காட்சியில் பாரம்பரிய நெல் ரகங்கள், அரிசிகள், இயற்கை மூலிகைகள், வேளாண் கருவிகள், இயற்கை சார்ந்த கைவி னைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
ரூ.22,000 கோடி ஒதுக்கீடு
நிகழ்ச்சியில், நபார்டு வங்கி முதன்மைப் பொதுமேலாளர் நாகூர்அலி ஜின்னா பேசியபோது, விவசாயிகளுக்கு மழை, பணம், சந்தை ஆகிய மூன்றும் வில்லனாக அமைந்து விடுகின்றன. இதிலி ருந்து விவசாயிகளைப் பாதுகாக்க தமிழகத்துக்கு ரூ.22,000 கோடி நிதி ஒதுக்க நபார்டு வங்கி திட்டமிட்டுள்ளது. அதில், குடி மராமத்துப் பணிகளைச் செய்ய ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது தொடங்கி யுள்ள குடிமராமத்துப் பணிகள் விவசாயிகளுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
ஒருங்கிணைந்த தேசிய விளைபொருட்கள் சந்தையை 6 மாதங்களில் செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் விவசாயிகள் விளை பொருட்களை ஆன் லைனில் பதிவு செய்து கொள்முதல் மையத்தில் கொடுத்த அரைமணி நேரத்தில், அதற்கான தொகை விவசாயியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்” என்றார்.