

போயஸ் தோட்டத்துக்குள் தொலைக்காட்சி கேமராமேன் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போயஸ் தோட்ட இல்லத்துக்கு நேற்று திடீரென சென்ற ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கும் சசிகலா ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை படம் எடுக்க முயன்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் ஏ.சஞ்சீவி, கேமராமேன் எம்.கே. ராகவன் ஆகியோரை சசிகலா ஆதரவாளர்கள் தாக்கினர். இதில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் சரவணன் தலைமையிலான போலீஸார் வந்து பத்திரிகையாளர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அவர்களின் கேமராக்களையும் பறிமுதல் செய்தனர். இதைக் கண்டித்து ஜெயலலிதா இல்லம் அருகே பத்திரிகையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமாதானம் செய்தனர். அதன் பின்னர், போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, தீபா போயஸ் இல்லம் சென்ற தகவல் அறிந்து 50-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் அங்கு விரைந்தனர். அவர்களை போயஸ் தோட்டம் சாலை, பின்னி சாலை சந்திப்பிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸாருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோபம் அடைந்த போலீஸார், பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்து இடையூறு செய்தனர்.
தாக்குதலில் காயமடைந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் சஞ்சீவி (வலது), ஒளிப்பதிவாளர் ராகவன் | படம்: க.ஸ்ரீபரத் |
பதற்றமான நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து போயஸ் தோட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். மதியம் 12.20 மணிக்கு தீபா போயஸ் இல்லத்தில் இருந்து வெளியே புறப்பட்டார். அவரிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால், பத்திரிகையாளர்களை சுற்றிவளைத்து பேட்டி எடுக்க விடாமல் போலீஸார் தடுத்தனர்.
போயஸ் தோட்டத்தில் நடந்த இந்த பரபரப்பில் நிருபர்களின் 4 செல்போன்கள் திருடு போயின. போலீஸார் பறித்து வைத்திருந்த கேமராக்கள், நீண்ட நேரத்துக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினகரன் உருவ பொம்மை எரித்த 16 பேர் கைது
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் தீபா, போயஸ் தோட்டத்தில் இருந்து நேற்று மதியம் வீடு திரும்பினார். இதையறிந்த அவருடைய ஆதரவாளர்கள் தி.நகரில் உள்ள அவரது வீடு முன் திரண்டனர். அப்போது அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள் திடீரென தினகரன் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். மேலும், தீபா தாக்கப்பட்டதைக் கண்டித்து தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 16 பேரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
பாதுகாப்பு: போலீஸ் விளக்கம்
ஜெயலலிதா வீட்டுக்கு பாதுகாப்பு குறித்து போலீஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அவர் வசித்து வந்த வீட்டை யார் உரிமை கோருவது என்பதில் தொடர் சிக்கல் இருந்து வருகிறது. இதனால், எந்த நேரத்திலும் திடீர் அசம்பாவிதம் ஏற்படலாம். இவற்றை தடுக்கவே முன்னெச்சரிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காலை 7 மணி முதல் மதியம் 2 மணிவரையும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணிவரையும், இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணிவரையும் 3 காவல் ஆய்வாளர்கள் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். இதுபோக 5 சாலை சந்திப்பு பகுதிகளில் தலா 2 போலீஸாரும், 3 காவல் உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்பிரிவு போலீஸார் என காலையில் 75 போலீஸாரும், இரவு 50 போலீஸாரும் தினமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.