

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 114 படகுகளை மீட்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள 4 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். வேலை நிறுத்தப் போராட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.
இந்நிலையில், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ராமேசுவரம் மீன்வளத் துறை அலுவலகத்தில் இருந்து கருப்புக் கொடிகளுடன் மீனவர்கள் பேரணி நடத்தினர். பின்னர், மீன்பிடித் துறைமுகம் அருகே கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்போராட்டத்துக்கு மீனவப் பிரதிநிதி போஸ் தலைமை வகித்தார்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், வரும் 12-ம் தேதி மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம், அதனைத் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.