Published : 03 Sep 2016 02:22 PM
Last Updated : 03 Sep 2016 02:22 PM

சங்க இலக்கியங்களை மேற்கோள்காட்டி மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை தூண்டும் பேராசிரியர்

தமிழ் மொழி மீதான ஆர்வம் குறைந்து, ஆங்கில மோகம் அதிகரித்து வருகிறது. பெற்றோர்களே தங்கள் குழந்தைகள் ஆங்கிலம் பேசுவதைத் தான் பெருமையாக கருதுகின்றனர். இந்த சூழலில் தமிழின் பெருமைகளை பேசும் விதத்திலும், தமிழர்கள் அறிவியல் தொழில்நுட்பங்களில் எவ்வளவு முனைப்புடன் இருந்தனர் என்பது குறித்தும் சங்க இலக்கியங்களின் வழி நின்று, இளைய தலைமுறையிடம் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார் ஓய்வு பெற்ற தமிழ் துறைத்தலைவர் தா.நீலகண்டன்.

நற்றிணை, குறுந்தொகை

அவர் கூறும்போது, ‘நாடோடியாய் வாழ்ந்த மனிதன் இனக்குழுவாக வாழ்வைத் தொடங்கியபோது அவனது முதல் தேவை உணவாக இருந்தது. ஆடிப் பட்டம் தேடி விதை என்ற வழக்கும் அந்த தேடலில் தோன்றியதே.

இன்று கற்றறிந்த விஞ்ஞானிகள் சொல்கின்ற மழைக்கேற்ற பயிர் முறைகள், இடைவெளி விட்டு நடவு செய்யும் முறை, பயிர் சுழற்சி போன்றவை தமிழன் அன்றே அறிந்திருந்ததை நற்றிணை, குறுந்தொகையை படித்தால் அறியலாம்.

கட்டிடக் கலையில் பழந்தமிழர்களின் கண்டுபிடிப்பில் முக்கியமானது செங்கல். அதனை பழந்தமிழர்கள் ‘இட்டிகை’ என பெயரிட்டு அழைத்துள்ளனர். சாதாரண மண்ணை அரைத்து, வடிவமைப்பு செய்து, கையை பதிவு செய்து சுட்டு, சுடு செங்கல் ஆக்கியுள்ளனர். ‘இட்டிகை நெடுஞ்சுவர் வீழ்ந்தென’ என, அகநானூற்றின் 35-ம் பாடல் வரி இதனை பதிவு செய்துள்ளது.

கட்டிடக் கலையின் அடுத்த கட்ட வளர்ச்சி கோயில் கலை. கோயில் முன்புறம் அமைக்கப்பட்ட குளங்கள் சதுர வடிவத்திலும், விவசாயத்துக்கான நீர் நிலைகள் வட்டவடிவிலும் அமைந்துள்ளன. சில ஏரி மற்றும் குளங்கள் பிறை சந்திர வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தன. இவை நீர் ஆதாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றின. நீரை சேமிக்கவும், பயன்படுத்தவும் தமிழர் சிறந்த உத்திகளை பின்பற்றினர்.

வானியல் ஆய்வாளர்கள்

வெளிநாட்டு வாணிபத்துக்கு நீர்வழி மேற்கொள்ள பல நாவாய்களையும் உருவாக்கினர்.

மிகச்சிறந்த நாவாய் ஓட்டுநரை, ‘பெருநீர் ஓச்சுநர்’ என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது. பழந்தமிழர் சிறந்த வானியல் ஆய்வாளர்களாகவும் இருந்தனர். அணுவைக் கூட பிளக்கலாம் என சங்க காலத்திலேயே பாடல்கள் மூலம் கம்பரும், அவ்வையாரும் உணர்த்தியுள்ளனர்.

ஆனால் இத்தனை சிறப்பையும் தமிழருக்கு உருவாக்கியது, தமிழ் மொழியின் வளமை மட்டுமே. அதுவே ஆழ் சிந்தனைகளுக்கும் அடிப்படை. ஆனால் இப்போது பலரும் குழந்தைகளை தமிழ் வழியில் சேர்ப்பதே கவுரவ குறைச்சல் என நினைக்கின்றனர். அதனால் இன்றைய தலைமுறையினருக்கு தமிழ், தமிழர்களின் பெருமைகளை சங்க இலக்கியத்தின் வழி நின்று பரப்பும் பணியை செய்து வருகிறேன். மாணவ, மாணவிகளிடம் இதுகுறித்து பரப்புரை செய்து வருகிறேன். மருத்துவம், பொறியியல் என அவர்கள் எது படித்தாலும் தமிழையும் சேர்த்தே படிக்க வேண்டும் எனும் விருப்பத்தின் வெளிப்பாடே இந்த முயற்சி’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x