இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கருணாநிதி கடிதம்

இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கருணாநிதி கடிதம்
Updated on
1 min read

ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு அக்கட்சித் தலைவர் கருணாநிதி அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடித்ததில்: டிசம்பர் 14ல் நடைபெறவுள்ள ஏற்காடு (எஸ்.டி.) சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தொடர்ந்து தமிழகத்தில் நடத்தி வரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை செய்கின்ற வகையில், இந்த இடைத் தேர்தலில்அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நல்கிடும் உறுதியான ஆதரவோடு போட்டியிடுவது ஆக்க பூர்வமானது என தி.மு.க., முடிவெடுத்துள்ளது.

எனவே, தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திடவும், சர்வாதிகார எண்ணத்தை வீழ்த்திடவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முடிவிற்கு உதவிடும் வகையில், ஏற்காடு இடைத் தேர்தலில் கழக வேட்பாளருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சியின் ஆதரவினை வழங்கிட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்வதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதம் தமிழகச் சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவரும், தே.மு.தி.க. நிறுவனருமான விஜயகாந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன், பா.ஜ.க. தமிழகத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர், கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன், எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர், ஆர்.எம்.வீரப்பன், ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in