Published : 08 Jan 2016 10:09 AM
Last Updated : 08 Jan 2016 10:09 AM

தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி: ட்விட்டரில் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி

| பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம் |

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

தமிழகத்தில் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது நடத்தப் படும். அதேபோல் மாட்டு வண்டி போட்டிகளும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நடத்தப்படு கிறது. இதற்காக காளைகளை மிகவும் முரட்டுத் தனமானதாக வளர்ப்பார்கள். ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளுக்கு மது ஊற்றி விடுவதாகவும், வால் பகுதியை முறுக்கி கோபமூட்டி விடுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.

ஜல்லிக்கட்டு நடத்த விலங்குகள் நலவாரியம், பீட்டா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக் கட்டு நடத்த தடை விதித்தது. அதனால் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். இதற்காக நாடாளு மன்றத்தில் சிறப்பு சட்டம் அல்லது அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், ஜல்லிக்கட்டு பேரவை குழுவினர் மத்திய அரசை வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கையை ஏற்கும் வகையில், இந்த ஆண்டு ஜல்லிக் கட்டு நடத்த நல்ல தகவல் வரும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும், தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண னும் உறுதி அளித்தனர். இந்நிலை யில், ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி போட்டிகளை நடத்த மத்திய அரசு நேற்று அனுமதி அளித்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த தகவல் வெளியானவுடன் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதி யில் மக்கள் உற்சாகம் அடைந்தனர். பட்டாசுகள் வெடித்தும் இனிப் புகள் வழங்கியும் மக்கள் மகிழ்ச் சியை கொண்டாடினர். எனினும், ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி போட்டிகள் நடத்துவதற்கு சில நிபந்தனைகளை அறிவிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட அறிவிக் கையில் கூறியிருப்பதாவது:

இந்த அறிவிக்கை வெளியான நாளில் இருந்து, கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம், காளை ஆகியவற்றை காட்சிப் பொரு ளாகவோ அல்லது அவற்றுக்கு பயிற்சி அளித்து வித்தை காட்டவோ பயன்படுத்த கூடாது. எனினும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த காளைகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

அதேபோல், மகாராஷ்டிரம், கர்நாடகா, பஞ்சாப், ஹரியாணா, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங் களில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தவும் காளைகளை பயன் படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும், மாட்டு வண்டி பந்தயம் 2 கி.மீ. தூரத்துக்குள் சரியான பாதையில் இருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டை பொறுத்தவரை வாடிவாசல் பகுதியில் இருந்து காளைகள் வெளியேறியவுடன் 15 மீட்டருக்குள் அதை அடக்க வேண்டும். மேலும், ஜல்லிக் கட்டுக்கு காளைகள் தகுதியாக உள்ளனவா என்பதை கால்நடை துறை மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும். காளைகளுக்கு போதை தரும் பொருட்களை வழங்க கூடாது.

ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி போட்டிகள் நடத்த மாவட்ட அதிகாரியின் அனுமதி பெற வேண்டும். இந்த போட்டிகளை விலங்குகள் வதை தடுப்பு மற்றும் மாநில விலங்குகள் நலவாரியம் அல்லது மாவட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். விலங்குகள் சித்ரவதை செய்யப் படவில்லை என்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு மத்திய அரசு அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் ட்விட் செய்தி

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்தது குறித்து அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டார். அதில், ‘‘ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் என்னை தொலைபேசி யில் தொடர்பு கொண்டு இந்த நல்ல செய்தியை கூறினார். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

பிரகாஷ் ஜவடேகர்

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதுதொடர்பாகக் கூறும்போது, “உரிய பாதுகாப்பு நடைமுறை களுடன்தான் ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், விலங்குகள் கொடூரமாக நடத்தப் படவில்லை என்பது உறுதி செய் யப்படுகிறது. கலாச்சார மற்றும் வரலாற்று நடை முறைகள் பல கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப் பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா நன்றி

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பும்படி தலைமைச் செயலாளருக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதமாக இருந்த, ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2014, மே 7-ம் தேதி தடை விதித்தது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜல்லிக்கட்டு உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்த மனுவை பிரதமரிடம் கடந்தாண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி நான் அளித்தேன். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கூறியது.

ஆனால், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக மசோதா ஏதும் தாக்கல் செய்யப்படாத சூழலில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கு கடந்த டிசம்பர் 22-ம் தேதி கடிதம் எழுதியிருந்தேன்.

இதன் காரணமாக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 7-ம் தேதி ஓர் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வரும் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக கொண்டாட முடியும். மத்திய அரசின் அறிவிக்கையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். ஜல்லிக்கட்டு நடக்க வழிவகை செய்த பிரதமர் மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x