Published : 15 Jul 2016 08:46 AM
Last Updated : 15 Jul 2016 08:46 AM

ஆசிரியர் பொது இடமாறுதல் விதிமுறைகளில் மாற்றம் இல்லை: அரசாணை வெளியீடு

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பொது இடமாறுதல் அளிக்கும் முறை கடந்த 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னர் இடமாறுதல் தொடர்பான நெறிமுறைகள் வெளியிடப்படும். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆகியும் இடமாறுதல் நெறிமுறைகள் வெளியிடப்படாததால் புதிய விதிமுறைகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது. இந்த ஆண்டு கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இதனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் சற்று அச்சப்படவே செய்தனர்.

இந்த நிலையில், 2016-17-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் இடமாறுதலுக்கு கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ளார். இந்த அரசாணை ஜூலை 6-ம் தேதி கையெழுத்தானபோதும் நேற்றுதான் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு கிடைக்கப்பெற்றது.

இந்த அரசாணையின்படி, இந்த ஆண்டு ஆசிரியர் பொது இடமாறுதல் விதிமுறைகளில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு என்ன விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவோ அதே விதிமுறைகள்தான் இந்த கல்வி ஆண்டிலும் பின்பற்றப்பட உள்ளன. அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் பணிநிரவல் செய்த பின்னரே பொது இடமாறுதல் மேற்கொள்ளப்படும். தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.6.2015-க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமே இடமாறுதலுக்கு விண்ணப்பிக்க முடியும். எனினும், பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், 40 வயதை கடந்த, திருமணம் செய்துகொள்ளாத முதிர் கன்னியர், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் போன்றோருக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x