

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் கோயிலுக்கு சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு சசிகலாவின் அண்ணன் மகன் டி.வி.மகாதேவன் (47) நேற்று காலமானார்.
சசிகலாவின் அண்ணன் விநோதகனின் மகன் டி.வி.மகாதேவன். இவர் தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் வசித்து வந்தார். மகாதேவன் கடந்த 2006-ம் ஆண்டு அதிமுக அம்மா பேரவை மாநிலச் செயலாளராக இருந்தார். பின்னர், கடந்த 2011-ல் இவர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலுக்கு மகாதேவன் நேற்று சென்றபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அருகில் இருந்த மருத்துவமனைக்கு மகாதேவனைக் கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, மகாதேவன் உடல் தஞ்சை பரிசுத்தம் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வுடன் சசிகலாவின் தம்பி திவாகரன் மற்றும் குடும்ப உறுப்பி னர்கள் வீட்டுக்கு வந்தனர்.
மேலும், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, எம்எல்ஏ ரங்கசாமி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, எஸ்பி மகேஷ், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மகாதேவனின் உடல் இன்று தஞ்சாவூர் ராஜகோரி சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
மகாதேவனுக்கு சித்ராதேவி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகள் கிருத்திகா எம்பிபிஎஸ், 2-வது மகள் சுராதின்கா 9-ம் வகுப்பு படிக்கின்றனர். மகாதேவன் உடலுக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, ராஜேந்திர பாலாஜி, சரோஜா உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.