

தமிழக அரசின் சமூக பாது காப்பு திட்டத்தின் அடிப்படையில், முதியோருக்கு மாதம் ரூ. ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் பயனாளிகளிடம் இருந்து உரிய சான்றுகள் பெறப்பட்டு, வங்கிக் கணக்கிலோ அல்லது அஞ்சல்துறை வாயிலாகவோ உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், உதவித்தொகை தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம், அம்மனம்பாக்கத்தைச் சேர்ந்த கே.தர்மலிங்கம் ‘தி இந்து’வின் உங்கள் குரலில் கூறிய தாவது:
எனக்கு தற்போது 73 வயதாகிறது. என் மனைவிக்கு சிறுநீரக பழுதால் உடல் நலமின்றி இருக்கிறார். நான் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மாதம் ரூ.ஆயிரம் உதவித்தொகையை பெற்று வருகிறேன்.
கடந்த மார்ச் மாதம் உதவித் தொகை வங்கிக் கணக்கில் வரவில்லை. கேட்டபோது, தேர்தல் முடிந்ததும் வரும் என்றனர். தேர்தல் முடிந்த பின்னரும் இதுவரை உதவித் தொகை வரவில்லை. பணிக்கும் செல்ல முடியாததால் மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன். எனக்கு உதவித்தொகை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக வருவாய்த் துறை தரப்பில் கேட்டபோது,
‘‘முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டது தொடர்பாக பல்வேறு புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன. அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர்தான் முதியோர் உதவித் தொகைக்கான பொறுப்பு அதிகாரியாவார்.
அவரை அணுகி இதுசம்பந்தமாக புகார் அளிக்க வேண்டும். புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.