Published : 25 Feb 2017 09:09 AM
Last Updated : 25 Feb 2017 09:09 AM

சென்னை சென்ட்ரல் அருகே மெட்ரோவில் 4 சுரங்கங்கள் தோண்டும் பணி நிறைவு

2 வழித்தடங்களும் இணையும் பிரதான ரயில் நிலையம் - இந்த ஆண்டு இறுதிக்குள் சென்ட்ரல் கோயம்பேடு ரயில் சேவை



*

சென்னையில் 2 வழித்தட மெட்ரோ ரயில்களும் இணையும் முக்கிய மையமான சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 சுரங்கப்பாதைகள் தோண்டும் பணிகளும் நேற்று நிறைவடைந்துள்ளன. கோயம்பேட் டில் இருந்து சென்ட்ரலுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் நேரடியாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும். ஒட்டுமொத்த பணிகளும் முடிந்து, 2018 ஜூலையில் மெட்ரோ ரயில் சேவை முழுமையாகத் தொடங்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே, பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு கீழே 70,060 சதுர அடியில், சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்தை பிரம்மாண்டமாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.400 கோடி செலவில் பல்வேறு வசதிகளுடன் இந்த ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. 2 வழித்தட மெட்ரோ ரயில்களும் இணையும் முக்கிய மையமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் இருக்கிறது. அதாவது, கோயம்பேடு, எழும்பூர் வழியாக வரும் மெட்ரோ ரயில் முதல் தளத்தில் வரும். வண்ணாரப்பேட்டையில் இருந்து வரும் ரயில் 2-வது தளத்தில் வந்து இணைந்து அண்ணாசாலை வழியாக பரங்கிமலை செல்லும்.

100 அடி ஆழத்தில் 2-வது தளம்

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் எழும்பூரில் இருந்து வரும் 2 சுரங்கப்பாதை தோண்டும் பணிகளும், வண்ணாரப்பேட்டையில் இருந்து வரும் ஒரு சுரங்கப்பாதை தோண்டும் பணியும் ஏற்கெனவே முடிவடைந்துள்ளன. வண்ணாரப்பேட்டையில் இருந்து வரும் மற்றொரு சுரங்கப்பாதை தோண்டும் பணி நேற்று நிறைவடைந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு விளக் கும் நிகழ்ச்சி நடந்தது. காலை 9.30 மணி அளவில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 100 அடி ஆழத்துக்கு அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு 6 மீட்டர் அகலத் தில் 10 முதல் 20 மீட்டர் ஆழத்தில் அமைக் கப்பட்ட சுரங்கப்பாதையில் ராட்சத இயந்திரம் சுற்றிக்கொண்டிருந்தது. அதில், சுமார் 15 நிமிடங்களுக்கு நீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. காலை 10.15 மணி அளவில் சுரங்கப்பாதையை துளைத்துக்கொண்டு இயந்திரம் வெற்றிகரமாக வெளியே வந்தது. மெட்ரோ ரயில் அலுவலர்கள், பணியாளர்கள் உற்சாக குரல் எழுப்பினர். வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மெட்ரோ ரயில் நிறுவன உயரதிகாரிகள் கூறியதாவது:

* தலைமை பொது மேலாளர் (சுரங்கம்) வி.கே.சிங்: 2 தளங்கள் கொண்ட சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் 380 மீட்டர் நீளம், 33 மீட்டர் அகலம் கொண்டது. இங்கு பூங்கா நகர், ரிப்பன் மாளிகை, சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரி என மொத்தம் 5 நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். மக்கள் வந்துசெல்லும் வகையில் பூங்கா நகர் - சென்னை மருத்துவக் கல்லூரி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பக்கிங்ஹாம் கால்வாய், பக்கிங்ஹாம் கால்வாய் சென்ட்ரல் என 8.9 மீட்டர் அகலத்தில் 3 சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும். பூக்கடை - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சுரங்கப்பாதை 14.8 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும். 2 சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் எஸ்கலேட்டர், லிப்ட் வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

2 வழித்தடங்களில் மொத்தம் 36 கி.மீ. சுரங்கப்பாதையில் அமைகிறது. சுரங்கம் தோண்டும் பணி 92.8 சதவீதம் முடிந்துள்ளது. அண்ணா சாலையில் டிஎம்எஸ் அருகே (1.2 கி.மீ), ஏஜிஎஸ் அருகில் மற்றொரு பாதையில் (1.2 கி.மீ) என மொத்தம் 2.4 கி.மீ. எஞ்சியுள்ளது. அந்தப் பணிகளும் விரைவில் முடிக்கப்படும்.

கோயம்பேட்டில் இருந்து நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையில் பணிகள் முடிந்து சோதனை ஓட்டமும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பாதுகாப்பு ஆணையர் வந்து ஆய்வு நடத்தி ரயில் இயக்க ஒப்புதல் வழங்குவார். அடுத்த 2 மாதங்களில் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்சேவை தொடங்கும்.

எழும்பூரில் இருந்து சென்ட்ரல் வரை சுரங்க ரயில் பாதை, சிக்னல் அமைக்கும் பணி ஜூன் மாதம் முடியும். கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் வரை இந்த ஆண்டு இறுதியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.

* கூடுதல் பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி: 2 மெட்ரோ ரயில் வழித்தடங்களும் சென்ட்ரலில் இணைகிறது. இதுதவிர, புறநகர் மின்சார ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை உள்ளிட்டவை அருகில் இருப்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையமாகும். இங்கு முதல் தளத்தில் கோயம்பேடு, எழும்பூர் வழியாக வரும் மெட்ரோ ரயில்களுக்காக 2 நடைமேடைகளும், 2-வது தளத்தில் வண்ணாரப்பேட்டையில் இருந்து வரும் மெட்ரோ ரயில்களுக்காக 2 நடைமேடை களும் அமைக்கப்படுகின்றன.

அனைத்து பணியும் 2018-ல் முடியும்

* திட்ட இயக்குநர் ராஜீவ் நாராயண் திவேதி: சின்னமலையில் இருந்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரை சுரங்கப்பாதை தோண்டும் பணி விரைவில் நிறைவடையும். மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் பணிகளும் முடிக்கப்பட்டு 2018 ஜூலையில் மக்கள் சேவைக்கு தொடங்கிவைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஷாப்பிங் மால், உணவகங்கள்

மக்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் தளத்தில் பெரிய அளவில் ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர, இங்கு வாய்ப்பு உள்ள பகுதிகளில் சோலார் கருவிகள் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஷாப்பிங் மால், உணவகங்கள் வரவுள்ள முதல் தளம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x