Published : 12 Jan 2014 04:02 PM
Last Updated : 12 Jan 2014 04:02 PM

பேச்சுக்கு முன் மீனவர்களை விடுவிக்க இலங்கை மறுப்பு

இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு முன்பு தமிழக மீனவர்களை விடுதலை செய்ய முடியாது என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னா தெரிவித்துள்ளார்.

இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இலங்கை மீன் வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னாவும் இந்திய உணவு, மீன் வளத் துறை அமைச்சர் சரத் பவாரும் டெல்லியில் செவ்வாய்க் கிழமை சந்தித்துப் பேச உள்ளனர்.

இதுதொடர்பாக இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னா கொழும்பில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

இருநாடுகளுக்கு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை யின்போது மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக சுமுக தீர்வு எட்டப்படும் என்று நம்புகிறேன். இருதரப்பு மீனவர்களும் ஒரே சமயத்தில் விடுவிக்கப்பட வேண்டும். இதுதொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின்னரே தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி நுழையும் பிரச்சினை குறித்தும் அதனால் இலங்கைக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகள் குறித்தும் அந்த நாட்டு அரசிடம் எடுத்துரைக்கப்படும் என்றார்.

அமைச்சர் ரஜிதா சேனரத்னா வுடன் அந்த நாட்டு சட்ட வல்லுநர் கள், கடற்படை அதிகாரிகள், வெளியுறவுத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவும் டெல்லி வருகிறது.

இலங்கை சிறைகளில் சுமார் 288 தமிழக மீனவர்களும் இந்திய சிறைகளில் 212 இலங்கை மீனவர்களும் உள்ளனர்.

‘பேச்சுவார்த்தைக்கு முன் விடுவிக்க வேண்டும்’

இந்திய-இலங்கை மீனவர் கள் இடையிலான பேச்சுவார்த் தைக்கு முன்பு இந்திய மீனவர் களை இலங்கை விடுவிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இந்திய-இலங்கை மீனவர் பிரச்னையைத் தீர்ப்பது தொடர் பாக வரும் 20-ம் தேதி சென்னை யில் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழக முதல்வரும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் காரைக்கால் மீனவர்களையும் சேர்க்க வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் குர்ஷித்திடம் வலியுறுத்தியுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x