பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி: இன்று புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழா

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி: இன்று புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழா
Updated on
2 min read

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான வேளாங்கண்ணி அன்னை ஆரோக்கியமாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும், பேராலயம், பேராலய விண்மீன் ஆலயம், பேராலயம் மேல்கோயில் மற்றும் கீழ் கோயில்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. மேலும், சிலுவைப் பாதை வழிபாடு, ஜெப மாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும், தினமும் மதியம் 12 மணிக்கு கொடியேற்றம், இரவு 9 மணிக்கு கொடியிறக்கம், இரவு 8 மணிக்கு பேராலய முகப்பில் இருந்து சிறிய தேர்பவனி நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை, பேராலய கலையரங்கில் அதிபர் பிரபாகர் அடிகளார் தலைமையில் தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் ஆகியவை நடை பெற்றன. அதனைத் தொடர்ந்து தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. பின்னர் இரவு 7.30 மணியளவில், வேளாங்கண்ணி மாதா எனப்படும் புனித ஆரோக்கிய மாதா வாசனை மலர்களாலும், பல வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளினார்.

பெரிய தேருக்கு முன் 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல் சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்தரியமாதா, ஆரோக்கியமாதா ஆகியோர் எழுந்தருள தேர் பவனி புறப்பட்டது. பேராலய வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின், ‘மரியே வாழ்க, மாதாவே வாழ்க’ என்ற வாழ்த்தொலிகளுடன் கடைத்தெரு, ஆரியநாட்டுத் தெரு, கடற்கரைச் சாலை வழியாக சென்ற தேர் பவனி, நள்ளிரவு மீண்டும் பேராலய முகப்பை வந்தடைந்தது.

இதில் உள்ளூர், வெளியூர் மட்டுமல்லாது வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் வந் திருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ந்து, இன்று (செப்.8) புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, காலை 6 மணிக்கு விண்மீன் கோயிலில், தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6 மணியளவில் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. மாதா பிறந்தநாளை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொடியேற்றம் முதல் பெரிய தேர் பவனி வரையிலான திருவிழாவில் மொத்தம் சுமார் 10 லட்சம் பக்தர்களுக்கு மேல் கலந்துகொண்டு வழிபட்டதாக பேராலய தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in