Published : 21 Sep 2016 11:11 AM
Last Updated : 21 Sep 2016 11:11 AM

படித்தது ஆங்கிலம்; பிடித்தது தமிழ்: வீடுதோறும் தமிழ் பரப்பும் முன்னாள் அரசுப் பணியாளர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளையோர், வணிகர்கள் என பல தரப்பட்ட மனிதர்களையும் சந்தித்து, தமிழ் படிக்கவும், குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைக்கவும் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார், அறநிலையத்துறை முன்னாள் பணியாளர்.

கன்னியாகுமரி மாவட்டம், மேல சூரங்குடியைச் சேர்ந்தவர் கவிஞர் சுயம்புலிங்கம்(66). அறநிலையத் துறையில் செயல் அலுவலராகப் பணி யாற்றி ஓய்வுபெற்றவர். பணிக்காலத் தின் போதே, பணியிடங்களில் தமிழ் தொண்டு செய்து வந்தவர். தனது ஓய்வுக்குப் பிறகு தனக்கு கிடைக்கும் ஓய்வூதியத் தொகையின் பெரும் பகுதியை தமிழ்ப் பணிக்கே செலவிட்டு வருகிறார்.

“ஆயிரம் மொழிகள் கற்றிடுவோம். தமிழுக்கு இடரெனில் களம் புகுவோம். ஆங்கிலமும் பேசுவோம். அருந்தமிழும் பேசுவோம்” என்கின்ற கொள்கையை அடிநாதமாகக் கொண்டு, தமிழ்நல மன்றம் என்னும் அமைப்பையும் நடத்தி வருகிறார்.

இதுகுறித்து `தி இந்து’விடம், சுயம்புலிங்கம் கூறியதாவது: பள்ளிக் காலங்களிலேயே எனக்கு தமிழ் ஆர்வம் அதிகம். என் அப்பா குருநாத மார்த்தாண்டம் ஜோதிடராக இருந்தார். அவருக்குத் தமிழ்ப் புலமை அதிகம். குமரி மாவட்டத்தை, தமிழகத்துடன் இணைக்கும் போராட்டங்களில் பங்கெ டுத்தவர். அவராலேயே, எனக்குத் தமிழ் ஆர்வம் ஏற்பட்டது பள்ளிப் படிப்புக்கு பிறகு எம்.ஏ. ஆங்கிலம் படித்தேன். அப்போதும்கூட தமிழை விடவில்லை. கூடவே நல்ல தரமான தமிழ் இலக்கிய நூல்களையும் வாசித்துக் கொண்டே இருந்தேன்.

பாடப்புத்தகங்களைவிட, இலக்கியங்களில் தமிழ் அதிகம் வாழ்கிறது என்பது என் நம்பிக்கை. படிப்பு முடிந் ததும் அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி கிடைத்தது. நெல்லை மாவட்டத்தில் பணி செய்தபோது, என்னுடைய தொழிலாளர் சேம நலநிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுத்து தேவநேய பாவாணர் நூற் றாண்டு விழாவை நடத்தினேன்.

திருநெல்வேலி மாவட்டம், வாசு தேவநல்லூரில் வீடுதோறும் திருக் குறள் புத்தகங்களை விநியோகித் தேன். நெல்லை மாவட்ட கவிஞர் பேரவைத் தலைவராக இருந்தேன். இப்போது பணி ஓய்வு பெற்று 7 ஆண்டுகள் ஆகின்றன. ஓய்வுக்குப் பிறகு எம்.ஏ. தமிழ் இலக்கியம் படித்தேன்.

என் மனைவி வாசுகி ஓய்வுபெற்ற ஆசிரியை. அவருக்கும் ஓய்வூதியம் வருகிறது. இதனால் எனது ஓய்வூதி யம் குடும்பத்தேவைக்கு அத்தியாவசி யம் அல்ல. அதனால் அதில் பெரும் பகுதியைத் தமிழ் பரப்ப பயன்படுத்தி வருகிறேன். கவிதை, ஆய்வு நூல் என இதுவரை 20 நூல்கள் எழுதியுள் ளேன்.

தமிழகத்தில் கடைகளில், வீதி களில் பெயர்ப் பலகைகளை தமிழில் தான் எழுத வேண்டும். குழந்தை களுக்குத் தமிழிலேயே பெயர் சூட்ட வேண்டும். கல்வி நிறுவனங்களில் தமிழில்தான் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்ற கொள்கைகளை பரப்பி வருகிறேன். இதற்காக பல துண்டுப் பிரசுரங்கள், விளக்க கையேடுகளையும் இலவசமாக விநியோகித்துள்ளேன்.

ஒரு நாளை கடந்து முடிப்பதற் குள் நூற்றுக்கும் மேற்பட்ட பிற மொழிச் சொல் கலப்பையும் இங்கு சேர்ந்தே கடக்கிறோம். பிறமொழிச் சொற்களைப் பேசும்போது, நம் தமிழ் ஒலி மரபுக்கு உட்பட்டேனும் பேச மாட்டார்களா என்ற ஏக்கமே இப் போது மேலோங்கி நிற்கிறது. நான் படித்த ஆங்கில இலக்கியமும், பார்த்த அரசுப் பணியும் வயிற்றுப் பசிக்கே தீனி போட்டது. தமிழ் மொழி தான் என் அறிவுப் பசிக்குத் தீனி போட் டுக் கொண்டிருக்கிறது. 5,000க்கும் அதிகமான புத்தகங்களைச் சேர்த்து என் வீட்டிலேயே நூலகம் அமைத் துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x