Last Updated : 31 Jul, 2016 01:17 PM

 

Published : 31 Jul 2016 01:17 PM
Last Updated : 31 Jul 2016 01:17 PM

விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் ‘மேச்சேரி’ செம்மறி ஆடு வளர்ப்புத் தொழில்: மானிய கடன் உதவிக்கு எதிர்பார்ப்பு

கிராம விவசாயிகளின் பொருளா தாரத்துக்கு கைகொடுக்கும் ‘மேச்சேரி’ செம்மறி ஆடு வளர்ப்புத் தொழில் வளர்ச்சி பெற அரசு மானிய கடனுதவிகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியாவில் வேளாண் ஆராய்ச்சி கழகம் நிதியின் கீழ் கர்நாடக மாநிலம் மாண்டியா, மஹராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் சோட்டா, சட்டீஸ்கர் மாநிலம் ராஞ்சி, ராஜஸ்தான் மாநிலத்தில் மால்புரா, கோனாதி ஆகிய இடங்களில் ஆடுகள் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன.

ஆராய்ச்சி மையம்

தமிழகத்தில், சேலம் மாவட்டம், மேச்சேரி, பொட்டனேரியில், தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் ‘மேச்சேரி’ செம்மறி ஆடு வளர்ப்பு ஆராய்ச்சி மையம் உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா ஆடுகள் சிறந்த கறியாகவும், பிற மாநில ஆடுகளின் ரோமம், பால், கறி ஆகியவை பிரதானமாக இருப்ப தாக ஆய்வு மூலம் கண்டறியப் பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரி செம்மறி ஆடு ஆராய்ச்சி மையம் மூலம் விவசாயிகளுக்கு ஆடுகள் வளர்ப்பு குறித்த பல்வேறு தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட அறிவுரைகள் கிடைப்பதால், மேச்சேரி பகுதியைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகளின் சார்பு தொழிலான கால்நடை வளர்ப்பில் ஆடு வளர்ப்புத் தொழிலில் பிரதான இடத்தை பிடித்துள்ளது.

பிரதான தொழில்

சேலம் மாவட்டம் கொளத்தூர், மேச்சேரி, பண்ணவாடி, தார்காடு, கோட்டையூர், காமனேரி, ஓமலூர் உள்ளிட்ட பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆடு வளர்ப்பு தொழில் மூலம் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றனர்.

இதுதவிர, ‘மேச்சேரி’ செம்மறி ஆடுகளை அண்டைய மாவட்டங் களான தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆடு வளர்ப்பு தொழிலுக்காகவும், கறிக்காகவும் அதிகளவு வாங்கி செல்கின்றனர்.

கருவூட்டல் ஆராய்ச்சி

சேலம் மாவட்டம், கொளத்தூரில் கடந்த 1972-ம் ஆண்டு செம்மறி ஆடு வளர்ப்பு ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு பின்னர் 1978-ம் ஆண்டு மேச்சேரி, பொட்டனேரியில் 1.62 ஏக்கரில் செம்மறி ஆடு வளர்ப்பு ஆராய்ச்சி மையம் இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது, இங்கு 900 செம்மறி ஆடுகளும், 300 வெள்ளாடுகளும், மஹராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த, ‘நார்மிகாஸ் சொர்ணா’ வகை ஆடுகள் மற்றும் செட்டை இன ஆடுகள் உள்ளன.

மேச்சேரி செம்மறி ஆடு ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் குட்டி ஈன்றும் பருவமாக கொண்டுள்ளது. வெள்ளாடுகள் ஆண்டு முழுவதும் குட்டி ஈன்றும். செம்மறி ஆடு ஒரு முறை ஒரு குட்டியே ஈன்றும், நார்மிகாஸ் சொர்ணா வகை ஆடு ஒரு முறை இரண்டு குட்டி ஈன்றும்.

‘மேச்சேரி’ செம்மறி ஆடுகளின் தரம் மாறாத வகையில் நார்மிகாஸ் சொர்ணா ஆடுகள் மூலம் கருவூட்டல் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதன் மூலம் பிற் காலத்தில் மேச்சேரி செம்மறி ஆடுகள் அதிகளவு இனப்பெருக்கத் தின் மூலம் தொழிலை விரிவுப் படுத்தும் திட்டமிடப்பட்டுள்ளது.ஆராய்ச்சி நிலையம் மூலம் மாதம் ஒரு முறை ஆடு வளர்ப்பு தொழிலில் வருவாய் ஈட்டும் முறை, தொழில் நுட்ப தகவல்கள், நோய் தடுப்பு முறை உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

லாபம் தரும் தொழில்

இதுகுறித்து பண்ணவாடியைச் சேர்ந்த ரமேஷ் கூறியது:

விவசாயிகளுக்கு அரசு மானிய கடனுதவி அளித்து, அவர்களின் நிதி ஆதாரத்துக்கு உதவி புரிந்து வருகிறது. அதுபோல் விவசாயத்துடன் தொடர்புடைய கால்நடை வளர்ப்பு தொழிலுக்கும் அரசு ஊக்கம் அளிக்கும் விதமாக, மானிய கடனுதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வருவாய் கிடைக்கும் தொழில்

தார்காடு பகுதியைச் சேர்ந்த பாலன் கூறியதாவது:

மேச்சேரி செம்மறி ஆடுகளை ஒரு பட்டிக்கு 40 ஆடுகள் வளர்ப்பதன் மூலம் ஆண்டுக்கு 30 குட்டி வரை பெற்று விற்பனை செய்ய முடியும். ஒரு குட்டி ரூ.3,500 வரை விற்பனை செய்யலாம். வளர்ந்த வெள்ளாடுகள், 15 முதல் 25 கிலோ வரையும், செம்மறி ஆடுகள் 30 கிலோ வரை இருக்கும்.

வளர்ந்த ஆடுகளை தவிர்த்து, குட்டி ஆடுகள் விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.1.50 லட்சம் வருவாய் ஈட்ட முடியும். மேலும், ஒரு மாதத்துக்கு 40 ஆடுகளின் சாணம் ஒரு லோடு வரும். இதனை ரூ.3 ஆயிரம் வீதம் 12 மாதங்களுக்கு ரூ.36 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும். முறையான பராமரிப்பு மூலம் உரிய லாபம் பெறமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x