

பல்வேறு தடைகளைத் தாண்டி, எண்ணூரில் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. 2 அலகுகளில் 1,320 மெகாவாட் மின் உற்பத்தி நிலை யப் பணிகளை 2017-க்குள் முடிக்கு மாறு, பெல் நிறுவனத்தை மின் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 5,040 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் 5 புதிய மின் நிலையங்களை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற் காக தமிழக மின் வாரியத்துக்கு உரிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையங்களில் உப்பூர் மின் நிலையத்துக்கு கருத்துக் கேட்பு பணிகள் நடந்து வரு கின்றன. எண்ணூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து, அதில் 2 அலகுகளில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கான கட்டுமான ஒப்பந்தம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத் துறை நிறுவன மான பாரத மிகு மின் (பெல்) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள் ளது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய தெற்கு சீன மின் வடிவமைப்பு நிறுவனத்தின் சார்பில், சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில், பெல் நிறு வனத்தை விட தகுதி வாய்ந்த தங்களது நிறுவனத்தின் விருப்ப டெண்டர் மனுவை பரிசீலிக்காமல், பெல் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்து தங்கள் நிறுவனத்திடம் கட்டுமானப் பணிகளை ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு சுமார் 15 நாட்க ளாக உயர் நீதிமன்ற விசாரணை யில் நிலுவையில் இருந்து, பின்னர் கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பெல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கட்டுமானப் பணி உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் எண்ணூர் மின் நிலையப் பணிகள் தொடங்குவது குறித்து, மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பெல் நிறுவனத்துக்கு மாநில மின் திட்டங்களில் எப் போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. மேலும் தமிழக மின் வாரியத் தின் பல்வேறு மின் நிலையங் களை பெல் அமைத்துக் கொடுத் துள்ளதால் அந்நிறுவனத்துக்கு கட்டுமானப் பணி கொடுத் துள்ளோம்.
தற்போது எண்ணூர் மின் நிலை யப் பணிகளுக்காக தேர்ந்தெடுக் கப்பட்ட இடத்தை பெல் நிறுவனத் திடம் கடந்த வாரம் ஒப்படைத்து, பணிகளைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. நவம்பரில் முதற்கட்ட பணிகளைத் தொடங்க உள்ளனர். வரும் 2017 இறுதிக்குள் அல்லது 2018 துவக்க மாதங்களில் பணி களை முடித்து, உற்பத்தி மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கு மாறு, பெல் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையம், திருவள்ளூர் மாவட்டம் வயலூர் கிராமத்தில், 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், தலா 660 மெகா வாட் உற்பத்தி செய்யும் 2 அலகு களாக அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை தொடங்குவதற்கு தமிழக அரசின் சார்பில் டிசம்பர் 2013-ல் அனுமதி வழங்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.