காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி?

காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி?
Updated on
2 min read

காவிரி நதியின் குறுக்கே தடுப்பு அணையும் நீர்மின் நிலையமும் அமைப்பதற்கு கர்நாடக அரசு மீண்டும் தீவிரமாக முயன்று வருவதாக கர்நாடக தலைமை செயலக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் மீண்டும் காவிரி விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேக் தாத் (தமிழில் 'மேக தாது' என்றும் குறிப்பிடலாம்) என்ற இடத்தில் தடுப்பு அணையும், நீர்மின் நிலையமும் அமைக்க கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், தற்காலிகமாக அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் பெங்களூர், மைசூர் மக்களின் குடிநீர் வசதியையும், மின் தேவையையும் பூர்த்தி செய்கிற வகையில் மீண்டும் 'மேக் தாத்' திட்டத்திற்கு அனுமதியளிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் அனுப்பினார்.

இதனை கடுமையாக எதிர்த்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில், ''நீண்ட காலமாக தமிழகத்திற்கும் கர்நாடகத்துக்கும் இடையே காவிரி நீர் பங்கீட்டில் தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அரசு நீர்ப்பிடிப்பு மிகுந்த மேக் தாத் என்ற இடத்தில் தடுப்பு அணையும், நீர்மின் நிலையமும் அமைத்தால் தமிழகத்திற்கு காவிரி நீர் வர முடியாத நிலை ஏற்படும். எனவே, கர்நாடக அரசின் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது'' என குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அந்தத் திட்டம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையி்ல், 'மேக் தாத் நீர்மின் நிலையத் திட்டத்தையும், தடுப்பு அணை கட்டும் திட்டத்தையும்' வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக முடிக்க திட்டமிட்டுள்ளதாக அம்மாநில தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கர்நாடக அரசின் நீர்வளத் துறை அதிகாரிகள் கடந்த 2 வாரங்களாக மேக் தாத் பகுதியில் முகாமிட்டு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் கர்நாடக அரசின் மின்சார துறை அதிகாரிகளும் நீர்மின் நிலையம் அமைப்பதற்கான சாத்தியகூறுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலிடம் விசாரித்த போது, 'நீர்மின் திட்டத்திற்கும், தடுப்பு அணை கட்டும் திட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், சட்டச் சிக்கல் வருமா என சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். ஏனென்றால் காவிரி ் விவகாரத்தில் கர்நாடக அரசு சட்டப்படி நடந்து கொள்வதையே விரும்புகிறது. சட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை வந்தவுடன் முதல்வருடன் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும். அதே நேரத்தில் காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியாகி உள்ளதால், இந்த திட்டம் துவங்குவதற்கு எந்த தடங்கலும் வராது'' எனத் தெரிவித்தார்.

தடுப்பு அணை கட்ட தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், சட்டச் சிக்கல் வருமா என சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது கர்நாடகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in