Published : 05 Oct 2014 04:08 PM
Last Updated : 05 Oct 2014 04:08 PM

ஜெயலலிதா கைதுக்கு எதிராக தனியார் பள்ளிகள் போராட்டம்: மார்க்சிஸ்ட் கண்டனம்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் தனியார் பள்ளிகள் போராட்டம் நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் அக்டோபர் 7-ம் தேதியன்று மூடப்படும் என்றும், பள்ளி நிர்வாகிகளும், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்போவதாகவும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகி தெரிவித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது.

போராட்டம் நடத்தும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் தனியார் பள்ளிகள் அறிவித்துள்ள போராட்டம், மாணவர்கள் நலனோ, ஆசிரியர்கள் நலனோ, கல்வித்துறை கோரிக்கையோ சம்பந்தப்பட்டது அல்ல. பொதுநலனும் சம்பந்தப்பட்டதும் அல்ல. மாறாக நீதிமன்றத்தால் ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக அரசியல் மற்றும் சுயநோக்கங்களுக்காக நடத்தப்படுவதாகும்.

இது ஜனநாயகத்திற்கும், பொதுநலன் சார்ந்த விழுமியங்களுக்கும் எதிரான செயலாகும். இது மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும். தமிழக அரசு நிர்வாகம் இதை வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கக் கூடாது.

நீதிமன்றத்தை நிர்பந்திக்கும் நோக்கோடு தமிழகம் முழுவதும் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், கேபிள் ஆப்ரேட்டர்கள் என்று ஒவ்வொரு பகுதியினரையும் ஆளும் கட்சியினர் மிரட்டலின் மூலம் வேலைநிறுத்தம் செய்ய தொடர்ந்து கட்டாயப்படுத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் ஊழலுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பை சிறுமைப்படுத்துவதும், சீர்குலைப்பதும் ஆகும்.

எனவே, அரசு நிர்வாகம் உரிய முறையில் தலையிட்டு ஆளுங்கட்சியினரின் மிரட்டல்களையும், தனியார் பள்ளி நிர்வாகங்களின் பள்ளிமூடல் நடவடிக்கையையும் தடுத்து நிறுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்துகிறது" என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x