சென்னை சில்க்ஸ் கட்டிடம் இன்று தரைமட்டமாகிறது: முன் பகுதி இடிந்து விழுந்தது

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இன்று தரைமட்டமாகிறது: முன் பகுதி இடிந்து விழுந்தது
Updated on
1 min read

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இன்றுடன் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட உள்ளது.

தியாகராய நகரில் செயல்பட்டு வந்த ‘தி சென்னை சில்க்ஸ்’ நிறுவனத்தின் 7 மாடி கட்டிடத்தில் கடந்த 31-ம் தேதி அதிகாலை திடீரென தீப்பிடித்தது. இதில் கட்டிடம் முற்றிலும் சேதம் அடைந்தது. இதையடுத்து கடந்த 2-ம் தேதி முதல் கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது.

ராட்சத ஜாக் கட்டர் இயந்திரம் மூலம் இடிப்புப் பணி நடந்து வருகிறது. கடந்த 10-ம் தேதி கட்டிடத்தை இடிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் கிருஷ்ணகிரி யைச் சேர்ந்த சரத்குமார் என்ற ஓட்டுநர் உயிர் இழந்தார். இதனால், இடிப்புப் பணி நிறுத்தப்பட்டது. கான்கிரீட் கழிவுகள் மட்டும் தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கட்டிடத்தின் முகப்பை எப்படி இடிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, கட்டிடத்தின் இடதுபுறம் இருக்கும் 8 தூண்களில் 7 தூண்கள் நேற்று படிப்படியாக இடித்து அகற்றப்பட்டது. 8-வது தூணை இடிக்கும்போது கட்டிடத்தின் முகப்பு அப்படியே சீட்டுக்கட்டு சரிவதுபோல இடிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் புழுதிப் படலம் ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கட்டிடத்தின் தரைதளத்தில் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை என்ற பெயரில் நகைக்கடை இருந்தது. இந்தக் கடைக்கான நகைகள் 6-வது மாடியில் ஒரு இடத்திலும், தரை தளத்தில் 2 இடங்களிலும் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதில், 6-வது மாடியில் உள்ள பெட்டகம் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது. அதை இன்று காலை மீட்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, கட்டிடம் முழுவதும் இன்று (18-ம் தேதி) இடித்து தரைமட்டமாக்கப்பட உள்ளதாக இடிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in