

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழ்நாட்டு அரசியல் தொடர்ந்து பரபரப்பான சூழலில் இருப்பதற்கு காரணம் என்ன? இங்கு பதவிக்காக சண்டை நடக்கிறது. சசிகலாவுக்கு எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது எனில், அவர்கள் ஏன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைவரின் தொலைபேசிகளும் ஏன் அணைத்து வைக்கப்பட்டுள்ளன?
மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை அவமானத்தை ஏற்படுத்துகிறது. வாக்களித்த மக்களை இவர்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். தன்னை ராஜினாமா செய்யுமாறு சசிகலா தரப்பினர் கட்டாயப்படுத்தியதாக கூறிய முதல்வர் பன்னீர்செல்வம் ஆளுநரை சந்தித்தபோது, அதை ஏன் தெரிவிக்கவில்லை? தற்போதுள்ள அரசியல் சூழல் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என்றார்.