

உள்ளாட்சித் தேர்தலை நடத்த எங்களுக்கு தயக்கமில்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இது தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று நடந்த விவாதம்:
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் (திமுக):
உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் உங்களுக்கு நல்ல பெயர் வரும். ஆட்சியில் சிறப்பான நிர்வாகமும் நடக்கும். தற்போது பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளீர்கள். இதை நீங்கள் நிறைவேற்றாவிட்டால், நாங்கள் வந்து நிறைவேற்றுவோம்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தார். அதன்படி, தேர்தலில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்:
50 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தது நீங்கள். அதை நிறைவேற்றப்போவது நாங்கள்தான். தேர்தலை நாங்கள் தடுத்து நிறுத்தவில்லை. தேர்தல் ஆணையம் தொடர்ந்து வாய்தா வாங்கி வருகிறது. அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் நீதிமன்றத்தில் வாய்தா பெற முடியுமா? நாளையே தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் எதிர்கொள்ள திமுக தயாராக உளளது.
அமைச்சர் வேலுமணி:
தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், திமுக வழக்கறிஞர்கள்தான் வழக்கு தொடர்ந்தனர். தேர்தலை நடத்த எங்களுக்குத் தயக்கமில்லை. தேர்தலை நடத்தி 100 சதவீதம் வெற்றியும் பெறுவோம்.
மு.க.ஸ்டாலின்:
அமைச்சர் தொடர்ந்து இதையே கூறி வருகிறார். தேர்தலை உரிய இட ஒதுக்கீடு அடிப்படையில் முறையாக அறிவித்திருக்கலாம்.
அமைச்சர் வேலுமணி:
முறை யாகத்தான் நடத்த அறிவித்தோம். தேர்தல் நடந்திருந்தால் 12 மேயர்கள், நகராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கானவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பார்கள். நீதிமன்றம் சென்றது யார்?
மு.க.ஸ்டாலின்:
தேர்தல் நடத்த தற்போது அரசு தயாராக இல்லை என நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் வேலுமணி:
மாநில தேர்தல் ஆணையம் சட்டப்படியான அமைப்பு. ஆரம்பத்தில் தேர்தல் நடத்த ஆணையம் தயாராக இருந்தது. அதன்பின், இட ஒதுக்கீடு விஷயத்தில் தடை ஏற்பட்டது. ஒரே நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம்.
இவ்வாறு உள்ளாட்சித் தேர்தல் மானிய கோரிக்கையில் விவாதம் நடந்தது.