

அதிமுக அரசின் கடந்த 5 ஆண்டுகால மோசமான ஆட்சி யால், அரசு ரூ.2 லட்சத்து 72 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. இந்த அரசு தொடர்ந்தால், அரசின் கடன் ரூ.5 லட்சம் கோடியாக உயரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
வடசென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டையில் நடை பெற்றது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்று பேசியதாவது:
ஆளுகின்ற பொறுப்பை மக்கள் அதிமுகவிடம் வழங்கிவிட்டனர். திமுகவை பிரதான எதிர்க்கட்சியாக சட்டப்பேரவையில் அமர்த்தினர். சாதாரணமாக ஆளுங்கட்சிதான் வலுவாக இருக்கும். எதிர்க்கட்சியில் சில சிக்கல்கள் இருக்கும். ஆனால், தமிழகத்தில் ஆளுங்கட்சி பலவீனமாகவும், எதிர்க்கட்சி வலிமையாகவும் உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், ஜெயலலிதா அரசு செய்த ஒரே சாதனை கடன் வாங்கியதுதான். இதனால் தமிழகம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. அதற்காக ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வட்டியாக செலுத்துகிறது. அடுத்த 5 ஆண்டுகளும், அதிமுக ஆட்சியே தொடர்ந்தால், தமிழகத்தின் மீதான கடன் ரூ.5 லட்சம் கோடியாக உயர்ந்துவிடும். தமிழகத்தில் வரி வருமானம் பெரிய அளவில் இல்லை. மதுக்கடையால் கிடைக்கும் வருமானம்தான் பெரியது. இந்த அரசு மதுக்கடைகளை நம்பி செயல்படுகிறது. இந்த அரசு மோசமான நிதி நிலைமையில் உள்ளது. இந்த மோசமான நிதிநிலைமைக்கு 4 ஆண்டுகள் கழித்து முற்றுப்புள்ளி வைப்பதற்கு பதிலாக, இன்றே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு, இந்த ஆட்சி தேவையில்லை என்பதை உணர்த்த, இந்த தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.
புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி பேசும்போது, “தமிழகத்தில் காமராஜர் ஆட்சியில் அனைத்து திட்டங்களும் அடித்தட்டு மக்களை சென்றடைந்தன. ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் பின்தங்கிவிட்டது .ஒரு தொழிற்சாலையும் தமிழகத்தில் திறக்கப்படவில்லை. முதல்வர் தொகுதியாக இருந்த இந்த தொகுதி அடிப்படை வசதிகள் இன்றி பின்தங்கிய நிலையில் உள்ளது. மக்கள், ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். இங்கு எம்எல்ஏக்களின் ஆட்சிதான் நடைபெறுகிறது. மக்கள் விரும்பும் ஆட்சி இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புவதை தெரிவிக்கும் விதமாக, திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்றார்.
கூட்டத்தில் காங்கிரஸ் வட சென்னை மாவட்ட தலைவர் ராய புரம் மனோ, திமுக வடசென்னை மாவட்ட செயலர் சுதர்சனம் உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர்.
ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தண்டையார்பேட்டையில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். அருகில் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள்.
படம்: ச.கார்த்திகேயன்