

திமுக உறுப்பினர்களின் சஸ்பெண்ட் விவகாரத்தில் சபாநாயகரின் பிடிவாதப் போக்கு ஏற்புடையதல்ல என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்களும், எதிர்க் கட்சி உறுப்பினர்களும் - நேற்றைய தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தொடர்ந்து கலந்து கொள்வதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு சபாநாயகர் சஸ்பெண்ட் செய்திருப்பதை திரும்ப பெற முடியாது என்று கூறியிருக்கிறார்.
சபாநாயகரின் இந்த பிடிவாதப்போக்கு ஏற்புடையதல்ல. முக்கிய மசோதாக்கள் நிறைவேறக்கூடிய இந்த வாரத்தில் அரசின் பிடிவாதப்போக்கு மக்கள் நலன் சார்ந்ததல்ல. இது ஜனநாயக மரபுக்கு ஏற்றதல்ல. அரசு இந்த நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்கு உரிய சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது'' என்று வாசன் கூறியுள்ளார்.