Published : 28 Jul 2016 09:10 AM
Last Updated : 28 Jul 2016 09:10 AM

பால் கொள்முதலில் பிரச்சினை ஏன்? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

குறைந்த விலைக்கு பாலை வாங்கி பால் கூட்டுறவு சங்கங்களுக்கு கொண்டு வருவதால்தான் பால் கொள்முதலில் பிரச்சினை ஏற்படுவதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

திமுக கொறடா அர.சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்):

பால் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பால் முழுவதையும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்வதில்லை. இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பால் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பால் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும்.

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் உற்பத்தி செய்யும் பால் முழுவதையும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது. வெளியில் பால் விலை குறைவாக இருப்ப தால் சிலர் அதனை பால் கூட்டுறவு சங்கங்களுக்கு கொண்டு வருகின்றனர். அதனால்தான் சில இடங்களில் பால் கொள்முதல் செய்வதில் பிரச்சினை ஏற்படுகிறது.

பால்வளத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்:

கடந்த 2006-ல் அதிமுக ஆட்சியில் தினமும் 22 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், 2011 திமுக ஆட்சியில் 1 லட்சம் லிட்டர் குறைவாக தினமும் 21 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள் முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது தினமும் 31 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. சிலர் கொண்டு வரும் தரமற்ற பால்தான் கொள்முதல் செய்யப்படுவதில்லை. பால் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பால் முழுவதும் கொள்முதல் செய்யப்படுகிறது.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x