Last Updated : 27 May, 2017 11:00 AM

 

Published : 27 May 2017 11:00 AM
Last Updated : 27 May 2017 11:00 AM

சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரால் தேவம்பாடி குளம் நிரப்பப்படுமா? - பொள்ளாச்சி விவசாயிகள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி தேவம்பாடி குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள குட்டைகளுக்கு, பொள்ளாச்சி நகரில் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரித்து, அந்த நீரை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் தேவம்பாடிவலசு கிராமத்தில் சுமார் 64 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது தேவம்பாடி குளம். குடிமராமத்து திட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் இந்தக் குளத்தை விவசாயிகள் தூர் வாரினர். மேலும், குளத்தின் கரைகளும் பலப்படுத்தப்பட்டன.

பொள்ளாச்சி நகராட்சியில் தற் போது பாதாள சாக்கடை திட்டப் பணி கள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் முழுமை அடையும்போது, நகராட்சியால் தினமும் சுத்திகரிக்கப்படும் கழிவுநீரின் அளவு சுமார் 1.20 கோடி லிட்டர் ஆகும்.

சுத்தகரிக்கப்பட்ட கழிவுநீர் கிருஷ்ணா குளம் வழியாக ஜலத்தூர் அய்யன் ஆற்றை அடைந்து, பின்னர் தாளக்கரை பள்ளம் வழியாக கேரள மாநிலத்துக்குச் சென்று கடலில் கலக்கும்.

இதுதவிர, பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 கிலோ மீட்டர் பரப்பில் பெய்யும் மழை நீரும், கிருஷ்ணா குளம் வழியாக கேரளாவுக்குச் சென்று, கடலில் கலந்து வீணாகிறது. இவ்வாறு வீணாகும் நீரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து விநாயகா தென்னை விவசாயிகள் சங்கத் தலைவர் பத்மநாபன் கூறியதாவது: கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை, தமிழக அரசின் மழை நீர் சேகரிப்பு திட்டம் மூலம் சேமிக்கலாம். ஜலந்தூர் அய்யன் ஆற்றின் நீரை தேவம்பாடி குளத்தில் நிரம்புவதன் மூலம் 6.80 மில்லியன் கனஅடி நீரைச் சேமிக்க முடியும்.

இவ்வாறு, ஒரு ஆண்டில் இந்த குளத்தில் சுமார் 19.80 மில்லியன் கனஅடி நீரைச் சேமிக்கலாம். குளத்துக்கு கீழ் உள்ள பல குட்டைகளுக்கு வாய்க்கால் அமைத்து, இந்த உபரி நீரை நிரப்புவதன் மூலம், தேவம்பாடி வலசு, கோவிந்தனூர், செல்லாண்டிக்கவுண்டன்புதூர், டி.காளிபாளையம், டி.நல்லிக் கவுண்டன்பாளையம், புரவிப்பாளை யம், கருமண்டகவுண்டனூர் உள்ளிட்ட பல கிராமங்களில் நிலத்தடிநீர்மட்டமும் உயரும்.

மேலும், 539 ஏக்கர் நிலம் நேரடி யாகப் பயன்பெறும். இதுதவிர, குளத்தைச் சுற்றியுள்ள 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும்.

பொள்ளாச்சி நகரின் சுத்தகரிக்கப் பட்ட கழிவுநீர் மற்றும் மழை நீர் தேவம்பாடி குளத்துக்கு வந்தடையும் வகையில் ஜலத்தூர் அய்யன் ஆற்றில் இருந்து தேவம்பாடி குளத்துக்கு வாய்க் கால் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x