

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் நடக்கிறது. வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது:
சிறு அசம்பாவிதமும் இன்றி உள்ளாட்சித் தேர்தலை முழு அமைதியாக நடத்தி முடிக்கும் பணியில் தமிழக காவல் துறை இறங்கியுள்ளது. தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க டிஜிபி அலுவலகத்தில் தனியாக தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைப் பது வழக்கம். ஒரு ஐ.ஜி. தலைமை யில், ஒரு எஸ்.பி., 2 கூடுதல் எஸ்.பி.க்கள், 2 டிஎஸ்பிக்கள், 6 இன்ஸ்பெக்டர்கள் இதில் பணி புரிவார்கள். இது குறித்த ஆலோச னைக் கூட்டம் சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. கூடுதல் துணை ஆணையர் தலைமையில் இது செயல்படும். கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு புகார் செய்வதற்கான தொலைபேசி எண்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கட்டுப்பாட்டு அறை நாளை முதல் முழுமையாக செயல்படத் தொடங்கும்.
பதற்றமான வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு பணிக்கு எவ்வளவு போலீஸார் தேவை, மாநில போலீஸார், ஊர்க்காவல் படை, இளைஞர் காவல் படை போன்ற பிரிவுகளை எங்கெங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது போன்றவை குறித்து முடிவு செய்துவிட்டோம். பதற்றமான வாக்குச்சாவடிகள், ரவுடிகள் பட்டியல் விரைவில் வெளியாகும்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க, கள்ள ஓட்டு போடு பவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட் டத்திலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும் என்றார்.