

தேமுதிக மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவர் மனைவி பிரேமலதா உள்பட 5 பேர் மீது உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சி கிராமத்தில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டை தேமுதிக நடத்தியது.
இதில், எம்எல்ஏக்கள் திருக்கோவிலூர் வெங்கடேசன், விருகம்பாக்கம் பார்த்தசாரதி, மயிலாடுதுறை அருட்செல்வன் ஆகியோர் பேசினர்.
அப்போது தமிழக முதல்வரை அவதூறாக அவர்கள் பேசியதாகவும், இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா தூண்டுகோலாக இருந்தனர் என்றும் புகார் கூறி, 5 பேர் மீதும் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக இணை செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ், அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் வேதகிரி மூலம் வெள்ளிக்கிழமை உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் இதற்கான மனுவை தாக்கல் செய்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி முத்துராமன் வருகின்ற 11-ம்தேதி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அன்றே சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ள கோதண்டபாணி, குணசேகரன்,வெங்கடேசன், ஏழுமலை, பூட்டோ ஆகிய 5 பேரும் சாட்சியம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.