

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று கேள்வி-பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை அதிகரித்து வருகிறதே?
இந்தக் கோரிக்கை பற்றி கழகத்தின் சார்பில் மாநிலங்களவையிலேயே கனிமொழி விரிவாகஎடுத்துரைத்துள்ளார். வேளாண் உற்பத்திக் குறைவு, கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறை, தீவனப் பற்றாக்குறை, மாநிலமெங்கும் வறட்சி போன்றவற் றால் தமிழ்நாடு சிக்கித் தவிக்கிறது. 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த மூன்றாண்டுகளாக தமிழகத்தில் சராசரியாகப் பெய்யக்கூடிய மழை இல்லை.
நிலத்தடி நீரளவும் வரலாறு காணாத அளவுக்குச் சுருங்கிவிட்டது. அதிலும் கடந்த 2013ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவ மழையும் பொய்த்து விட்டது, தென்மேற்குப் பருவ மழையும் பொய்த்துவிட்டது. கடந்த மூன்றாண்டு காலமாக தமிழகத்தில் குறுவைப் பயிர் அறவே நடைபெற முடியாத நிலை. இந்த ஆண்டு ஆகஸ்ட் பிறந்த பிறகும் மேட்டூர் அணையை பாசனத்திற்காகத் திறக்க முடியவில்லை.
விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல், மேலும் கடன் பெறவும் முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். இந்தப் பிரச்சினைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் கோரிக்கை வைத்துள்ளன. 2012ஆம் ஆண்டிலிருந்து வறுமை காரணமாக பத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, விவசாயிகளுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்கிக் காப்பாற்றிட அரசு முன்வர வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.