

தமிழக காங்கிரஸுக்கு புதிய தலை வர் நியமிக்கப்படாததால் காமராஜர் பிறந்த நாளை கொண்டாட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வென்றது. இந்த தோல்விக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனே காரணம் என எதிர்த்தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.
அதனைத் தொடர்ந்து இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு 3 வாரங்கள் முடிந்துள்ள நிலையில் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. தலைவர் பதவிக்கு 10-க்கும் அதிகமானோர் போட்டியிடுவதும், எல்லோருக்குமே எதிர்ப்பு இருப்பதாலும் தலைவரை நியமிக்க முடியாமல் மேலிடம் திணறி வருகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் இல்லாததால் கட்சியில் கோஷ்டி மோதல் மேலும் அதிகரித் துள்ளது. காமராஜரின் 114-வது பிறந்த நாள் இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் இமெயில் முகவரியிலிருந்து தனித்தனியாக ஊடகங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இளங்கோவ னின் ஆதரவாளரான மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா விடுத்துள்ள அழைப்பில், சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணிக்கு நடைபெறும் காமராஜர் பிறந்த நாள் விழாவில் அகில இந்தியச் செயலாளர் சின்னா ரெட்டி, இளங்கோவன், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பங்கேற்பார்கள். காலை 9.30 மணிக்கு ஜிம்கானா கிளப், 10.30 மணிக்கு தியாகராய நகர் காமராஜர் நினைவு இல்லம் ஆகிய இடங்களில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை உறுப்பினருமான டி.யசோதா வெளியிட்டுள்ள செய்தியில், காலை 10 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் காமராஜர் பிறந்த நாள் விழாவில் குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என தெரிவித்துள்ளார்.
ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட இரு கோஷ்டிகள் அழைப்பு விடுத்திருப்பது காங்கிரஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆ.கோபண் ணாவிடம் கேட்டபோது, “தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களான முகுல் வாஸ்னிக், சின்னா ரெட்டி ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். காமராஜர் பிறந்த நாள் விழா சர்ச்சையாக்கப்படுவதை விரும்பவில்லை” என்றார்.
டி.யசோதாவிடம் கேட்ட போது, “ஒவ்வொரு காங்கிரஸ் காரர்களுக்கும் காமராஜர் தெய்வம். அவரது பிறந்த நாளுக்காக சத்தியமூர்த்தி பவனில் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என அறிந்தேன். அதனால் மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோருடன் பேசி விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளேன். இளங்கோவன் பதவி விலகி விட்டதால் அவரால் ஊடகப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்ட கோபண்ணாவின் பதவியும் நீடிக்கிறதா எனத் தெரியவில்லை. யாருக்கும் போட்டியாக நான் விழா நடத்தவில்லை. காமராஜருக்காக நடத்துகிறேன்” என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் இல்லாமல் காமராஜர் பிறந்த நாள் விழா நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.