

வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட்டில் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் எச்.டி.எப்.சி வங்கி சார்பில் நடத்தப்பட்டது.
பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட்டில் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் எச்.டி.எப்.சி வங்கி சார்பில் சென்னை அண்ணா சாலை பிரின்ஸ் குஷால் டவர்ஸ்ஸில் நடத்தப்பட்டது. எச்டிஎப்சி வங்கியின் முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி விஷால், வங்கி கணக்கு பணம் பாதுகாப்பு குறித்து இந்த கருத்தரங்கில் பேசுகையில், "பல வகையான வங்கி சேவைகளில் நெட் பேங்கிங் வழியாகத்தான் அதிகமான பணம் திருடப்படுகிறது. பொதுமக்களின் அஜாக்கிரதை மட்டுமே இதற்கு முதல் காரணம். டெபிட் கார்டு பின் நம்பரை தேவையற்ற நபர்களிடம் கூறக் கூடாது. வீடு மற்றும் தொலைபேசி எண்களை மாற்றும்போது அதுகுறித்த தகவல்
களை வங்கியிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்ற அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் வேறு நபர்களின் கைகளில் கிடைக்காதவாறு கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களின் வங்கி தொலைபேசி எண் மற்றும் வாடிக்கையாளர் சேவை எண்ணை தெரிந்து வைத்தி ருக்க வேண்டும். டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அதுகுறித்த தகவல் களை வங்கிக்கு தொலைபேசி மூலம் உடனே தெரிவிக்க வேண்டும்.
தொலைபேசி எண் சில நேரம் செயல்படாமல் இருந்தால் உடனே தொலைபேசி நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். வங்கி சார்பில் கொடுக்கப்படும் தகவல்களை கவனமாக கேட்க வேண்டும். தேதி, தொகை எழுதாமல் வெற்று காசோலையில் கையெழுத்து போடக்கூடாது. இவற்றை கடை பிடித்தால் வங்கி கணக்கில் உள்ள உங்கள் பணத்தை திருட்டில் இருந்து தடுத்துவிடலாம்" என்று கூறினார்.
எச்டிஎப்சி வங்கியின் தகவல் தொடர்பு துணை தலைவர் ராஜீவ் பானர்ஜி, மண்டல தலைவர் ஜார்ஜ் மாத்தாய் கலந்து கொண்டனர்.