

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற் றாண்டு பிறந்த நாள் விழா இன்று (செப்டம்பர் 16) கொண்டாடப் படுகிறது. இதையொட்டி எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருதுகளை அறிவிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக சங்கீதத்தில் புகழ்பெற்று விளங்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி மதுரையில் செப்டம்பர் 16, 1916-ம் ஆண்டு பிறந்தார். அதன்படி அவரது நூற்றாண்டு பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தனது 10-வது வயதில் தனியார் நிறுவனத்துக்காக பாடல் பாடிய எம்.எஸ்.சுப்புலட்சுமி, தொடர்ந்து அரங்கேற்றங்களை நடத்தினார். தனது குரல் வளத்தாலும், குரல் வசீகரத்தாலும் திரையுலகிலும் பாடல்களைப் பாடி பிரபலமடைந்தார்.
தேசப்பற்று மிக்கப் பாடல்கள், தெய்வீகப் பாடல்கள், பஜனைப் பாடல்கள் ஆகியவற்றை பாடி மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, காமராஜர், அப்துல் கலாம் போன்ற அனைத்து தலைவர் களாலும் போற்றப்பட்டார். உலக அமைதிக்காக ஐ.நா சபையில் 1996-ல் பாடல் பாடினார். இசை மூலமாக கிடைத்த வருவாயை நற்பணிகளுக்கும், சமூக சேவைகளுக்கும் அளித்தார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு 1954-ல் பத்மபூஷண் விருதும், 1968-ல் மியூசிக் அகாடமி வழங்கிய சங்கீத கலாநிதி பட்டமும், 1974-ல் மகசேசே விருதும், 1975-ல் பத்ம விபூஷண் விருதும், 1998-ல் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளன.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெரு மைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் இசை ஆர்வம் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை அத்துறையில் சாதிக்க செய்ய வேண்டும். மேலும், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருதுகளை வழங்கி கவுரவிக்க வேண்டும்.