

இரண்டாம் போக பாசனத்திற்காகவும்,பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவைக்காகவும் 28- ஆம் தேதி முதல் தண்ணீர் ஆழியாறு அணையிலிருந்து திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திலுள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதோடு, பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவையும் நிறைவு செய்யப்படும்.
இது தொர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஆழியார் ஐந்து பழைய வாய்க்கால்களின் பாசன பகுதிகளுக்கு இரண்டாம் போக பாசனத்திற்காகவும், பொள்ளாச்சி நகரமக்களின் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்துவிடக் கோரி, ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட கோயம்புத்தூர் மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஆழியாறு அணையிலிருந்து ஐந்து பழைய வாய்க்கால்கள் மூலமாக இரண்டாம் போக பாசனத்திற்காகவும்,பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவைக்காகவும் 28.10.2013 முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.