Published : 30 Jun 2015 02:20 PM
Last Updated : 30 Jun 2015 02:20 PM

ஜெயலலிதா 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 1,50,722 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன், சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம் தேதி நடந்தது. இதில் 74.4 சதவீத வாக்குகள் பதிவாகின. 181-வது வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளில் குழப்பம் ஏற்பட்டதால், அங்கு மட்டும் நேற்று (திங்கள்கிழமை) மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ராணி மேரி கல்லூரியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தபால் வாக்குகள் எண்ணப்பட்டவுடனேயே அதிமுக முன்னிலை பெற்றது.

மொத்தம் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்தே முதல்வர் ஜெயலலிதா பல ஆயிரம் வாக் குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வந்தார். ஒவ்வொரு சுற்றிலும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரனைவிட 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகளை கூடுதலாக பெற்றார்.

பிற்பகல் 2 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிந்தது.

17-ம் மற்றும் இறுதிச் சுற்று முடிவில், ஜெயலலிதா (அதிமுக) - 1,60,432 வாக்குகளும், மகேந்திரன் (இ.கம்யூ.) - 9,710 வாக்குகளும், டிராபிக் ராமசாமி - 4590 வாக்குகளும் பெற்றனர்.

அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரனை 1,50,722 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என 2374 வாக்காளர்கள் 'நோட்டா'-வை தேர்வு செய்திருந்தனர்.

மற்ற வேட்பாளர்களில் ஒருவர்கூட 3 இலக்கத்தைத் தாண்டவில்லை. சி.மகேந்திரன், டிராஃபிக் ராமசாமி உட்பட 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

ஜெயலலிதா நன்றி:

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இடைத்தேர்தலில் தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி பெறச் செய்த அத் தொகுதி வாக்காளர்களுக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "என்னுடைய வார்த்தைக்கு மதிப்பளித்து, என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில், என்னை மகத்தான வெற்றி பெறச் செய்த எனது அன்பார்ந்த ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஓரிரு தினங்களில் பதவியேற்பு:

முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் பிற்பகல் 2.30 மணிக்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், வடசென்னை எம்.பி. வெங்கடேஷ் பாபு ஆகியோர் வாக்கு எண் ணிக்கை நடக்கும் இடத்துக்கு வந்தனர். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை முதல்வர் ஜெயல லிதா சார்பில் ஆர்.கே.நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பி.வெற்றிவேல், தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜனிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

பின்னர், போயஸ் தோட்டத்துக்கு சென்ற வெற்றிவேல், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து சான்றிதழை அளித்தார்.

முதல்வர் ஜெயலலிதா இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதும், நேற்று மாலை 4 மணிக்கே தலைமைச் செயலகத்தில் எம்எல்ஏவாக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், 3.30 மணி அளவில் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது.

ஓரிரு தினங்களில் முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவியேற்பார்.

ஆளுநர் ரோசய்யா வாழ்த்து:

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து, தமிழக ஆளுநர் ரோசய்யா, ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் சுற்றுவாரியாக வாக்கு எண்ணிக்கை நிலவரம் தெரிந்து கொள்ள > | ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x