

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் இரண்டாம் வாரத்தில் தொடங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் வருவாய், பொதுப்பணித்துறை, போக்குவரத்து, மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு மற்றும் ராணுவம், வானிலை இலாகா போன்ற 15 துறைகளின் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் மற்றும் வழங்கப்பட்ட அறிவுரைகள் குறித்து ‘தி இந்து’ நிருபரிடம் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
சாலைகளை செப்பனிடுதல், மழைநீர் வடிகால்களைத் தூர் வாருதல் போன்ற பணிகளை துரிதகதியில் முடிக்கும்படி இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை கேட்டுக்கொள்ளப்பட்டது. புயல் அபாயங்களை சமாளிக்க தயார் நிலையில் இருக்கும்படி ராணுவத்தினரை இக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டோம்.
இதுபோல் வானிலை பற்றிய தகவல்களை 3 தினங்களுக்கு முன்பாகவே தெரிவிக்க வானிலை இலாகாவினர் சம்மதம் தெரிவித்தனர். அப்போதுதான் தமிழக அரசு, மழை, வெள்ளம் போன்றவற்றைச் சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
குளம், ஏரி போன்றவற்றில் உடைப்பு ஏற்பட்டால் அவற்றை அடைக்க ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக பொதுப்பணித்துறையினர் கூட்டத்தில் தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்கள், மின்இணைப்பு களைக் கண்டறிந்து அவற்றை உடனடியாக சரிசெய்யும்படி மின்துறையினரும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
சென்னையில் உள்ள பொதுமக்கள் 1070 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தீ, வெள்ளம் உள்ளிட்ட ஆபத்து கால பிரச்சினைகளைப் பற்றிய தகவல்களைக் கூறலாம். மற்ற மாவட்ட மக்கள் 1077 என்ற தொடர்பு எண்ணில் புகார் செய்யலாம். புகார் பற்றி உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.