Published : 18 Jun 2016 12:57 PM
Last Updated : 18 Jun 2016 12:57 PM

ஜிப்மர் நுழைவுத் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை: இயக்குநர் பரிஜா உறுதி

ஜிப்மர் மருத்துவ நுழைவுத் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என அதன் இயக்குநர் டாக்டர் எஸ்சி.பரிஜா தெரிவித்துள்ளார்.

ஜிப்மர் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அசோக் ஆனந்த் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் நுழைவுத் தேர்வில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என ஜிப்மர் இயக்குநர் பரிஜா தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு விதிகளின்படி தான் ஜிப்மர் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. அதிகமான விண்ணப்பதாரர்கள் 1.56 லட்சம் பேர் விண்ணப்பித்ததால் நுழைவுத் தேர்வு இரு வேளைகளாக நடத்தப்பட்டது. இதில் எந்த விதிமீறலும் இல்லை. 2012-ல் 18,000, 2013-ல் 24000, 2014-ல் 93000, 2015-ல் 1,40,000, 2016-ல் 1,57,000 பேர் விண்ணப்பித்தனர்.

ஒரு வேளைக்கு 1.5 லட்சம் கணினிகள் மூலம் தான் நுழைவுத் தேர்வு நடத்த இயலும். எனவே, நுழைவுத் தேர்வு இரு வேளைகளாக நடத்தப்பட்டது. காலையில் நடந்த தேர்வு கடினமாகவும், மாலையில் நடந்த தேர்வு எளிதாகவும் இருந்ததாக கூறப்படும் புகாரிலும் உண்மையில்லை.

வினாத்தாள் கடுமையான விதிகளின்படி தான் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக நுழைவுத் தேர்வு முடிந்து 24 மணி நேரம் கழித்து தான் விடைத்தாள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். இது வழக்கமான நடைமுறை தான். இவற்றில் எந்த முறைகேடும் இல்லை. கல்வி பயிலவும், நுழைவுத் தேர்வு எழுதவும் வயதுவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. 44 வயதைச் சேர்ந்தவர் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

வரும் 20-ம் தேதி முதல் ஜிப்மரில் மருத்துவ கலந்தாய்வு தொடங்குகிறது. ஜிப்மர் புதுச்சேரி, ஜிப்மர் காரைக்கால் வளாகங்களுக்கு 20-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு காலை 8 மணிக்கும், 21-ம் தேதி காலை 8 மணிக்கு ஓபிசி, (OBC, UR), 22-ம் தேதி எஸ்.சி, எஸ்.டி, புதுச்சேரி, வெளிநாட்டு வாழ்இந்தியர், இதர மாநிலத்தவர் என கலந்தாய்வு நடைபெறும். 29-ம் தேதி காலை 10 மணிக்கு சேர்க்கை ஆணை தரப்படும்.

காரைக்கால் மாணவர்களுக்கு 6 வார பயிற்சி:

காரைக்கால் ஜிப்மர் வளாக வகுப்புகள் ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்குகிறது. எனினும் அவர்களுக்கு புதிதாக வகுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி அடிப்படை பயிற்சிக் கல்வி 6 வாரங்களுக்கு புதுச்சேரி ஜிப்மரில் கற்பிக்கப்படும். ஆகஸ்ட் 13-ம் தேதி வரை இப்பயிற்சி அளிக்கப்படும். பின்னர் 16-ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும்.

ஜிப்மர் மருத்துவமவையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீண்டும் இதற்கான பதிவை புதுப்பித்து மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. மத்திய அரசு புதிதாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான பணிகள் கடந்த 8 மாதங்களாக நடந்து வருகின்றன. இதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவர்கள், அறுவை சிகிச்சை கூட பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. ஜூலை மாதம் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேலும் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுக் குழு விரைவில் ஜிப்மர் வந்து சோதனை செய்ய உள்ளது. அதன் அடிப்படையில் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் வழி பிறக்கும். விரைவில் ஜிப்மர் மருத்துவமனை சர்வதேச உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையமாக மாற்றப்படும்.

ஜிப்மர் மருத்துவமனையில் பயிலும் மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள் தங்கள் ஆய்வுகளுக்கு காப்புரிமை பெறலாம். முதன்முறையாக தற்போது 6 பேரின் ஆராய்ச்சிகளுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பிக்க உள்ளோம். மத்திய அரசின் தத்கல் காப்புரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கிறோம்.

பொதுவாக காப்புரிமை பெற விண்ணப்பித்து 4 ஆண்டுகள் ஆகும். தத்கல் திட்டத்தில் 18 மாதங்களில் காப்புரிமை பெற்று விடலாம். காப்புரிமை பெற்றால், தகுதியான தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஜிப்மர் என்ற சந்தைப் பெயரில் பொருள்களை உற்பத்தி செய்யலாம்.’’ என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x