

திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இலங்கை அமைச்சருக்கு நேற்று சிறுநீரக அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் திருச்சி வந்தார். வாத்தலை அருகேயுள்ள குணசீலம் பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பிறகு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே சிறுநீரகத்தில் கல் உருவாகி அடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கு அறுவைச் சிகிச்சை செய்துகொள்வதற்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் நேற்று அறுவைச் சிகிச்சை செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற பிறகு இலங்கை திரும்புவார் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவருக்கு நேற்று முன்தினம் கருப்புக்கொடி காட்ட மதிமுக-வினர் குணசீலத்தில் திரண்டனர். அதற்கு முன்பே ராதாகிருஷ்ணன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு கிளம்பிச் சென்று விட்டார்.
இதனால் அவர் சிகிச்சை பெற்றுவரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.