Published : 25 Jan 2017 12:38 PM
Last Updated : 25 Jan 2017 12:38 PM

வறட்சியால் தென் மாவட்டங்களில் 100 சதவீதம் விவசாயம் பாதிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்தியக் குழு தகவல்

கடும் வறட்சியால் தென் மாவட்டங்களில் 100 சதவீதம் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என வறட்சி பாதிப்புகளை பார்வையிட வந்த மத்தியக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வறட்சி பாதிப்புகளை பார்வையிட மத்திய நீர்வளத்துறை இயக்குநர் ஆர்.அழகேசன், மத்திய ஊரக வளர்ச்சித் துறை துணை இயக்குநர் எஸ்.பி.திவாரி ஆகியோர் கொண்ட மத்தியக்குழு நேற்று தூத்துக்குடியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் வந்தது.

இக்குழுவினர் கடலாடி வட்டம் கடுகுச்சந்தை கிராமத்தில் வறட்சி யால் கருகிய சோளம், கம்பு, கடுகுச்சந்தையில் நிலக்கடலை, கீழச்செல்வனூர் மற்றும் கீழக் கிடாரம் கிராமங்களில் நெற் பயிர்கள், திருப்புல்லாணி ஒன்றியம் பனையடியேந்தலில் மிளகாய் பயிர், பனைக்குளத்தில் நெற்பயிர்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். லாந்தை கிராமத்தில் மத்திய நீர்வளத் துறை நிதி மூலம் ரூ. 94.37 லட்சத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட கண் மாயை பார்வையிட்டனர்.

இதுகுறித்து மத்திய நீர்வளத் துறை இயக்குநர் ஆர்.அழகேசன் கூறியது: 10 பேர் கொண்ட மத்திய குழுவில் 3 உறுப்பினர் கொண்ட 2 குழுக்கள், 2 உறுப்பினர் கொண்ட 2 குழுக்கள் தமிழகம் முழுவதும் திங்கள் முதல் புதன் வரை பாதிப்புகளை பார்வையிடுகிறது. நாங்கள் நேற்று விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களை பார்வையிட்டோம். இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை பார்வையிடுகிறோம். நாளை புதுக்கோட்டை மாவட்டத்தை பார்வையிட உள்ளோம். இதுவரை பார்த்த வரையில் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி ஏற்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 100 சதவீதம் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம்.

பயிர் பாதிப்பு குறித்த அனைத்து விவரங்களும் எங்களது மத்திய குழுவின் தலைமைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு அதனடிப்படையில் மதிப்பீடு செய்து விவசாயிகளின் நலனுக்காக விரைவில் வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

ஆய்வின்போது, தமிழக வேளாண் இயக்குநர் வி.தட்சிணா மூர்த்தி மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.அலி அக்பர், பரமக்குடி சார் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், வேளாண் இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்

(வேளாண்மை) வி.எஸ்.வெள் ளைச்சாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தமிழ்வேந்தன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x