Published : 02 Jan 2016 08:32 AM
Last Updated : 02 Jan 2016 08:32 AM

வெள்ள பாதிப்புக்கு பிறகு தமிழகத்தில் தொற்றுநோய் ஏற்படவில்லை: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழக அரசு எடுத்த தீவிர நடவடிக்கையால் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்குப் பிறகு தொற்றுநோய் எதுவும் ஏற்படவில்லை என்று மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்திய ப்ராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் அறக்கட் டளை தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

சமீபத்தில் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதை ஒட்டி தமிழக அரசு ஏற்பாடு செய்த 73 ஆயிரம் மருத்துவ முகாம்கள் காரணமாக இதுவரை தொற்று நோய்கள் எதுவும் ஏற்படவில்லை.

தமிழகத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கருப்பை, மார்பக புற்றுநோய்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அறிகுறிகளை கண்டறியும் சோதனைகள் இலவசமாக செய்யப்படுகின்றன. இதனால் ஆரம்ப நிலையிலேயே ஒருவருக்கு நோய் ஏற்படுவதை கண்டறிந்து சிகிச்சையளித்து அவரை காப்பாற்ற முடிகிறது. மேலும், நாட்டிலேயே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதிலும், உடல் உறுப்பு தானம் பெறுவதிலும், மருத்துவ சுற்றுலாவிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ப்ராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இணைய தளம் தொடங்கப்பட்டது. மருத்துவ கையேடு வெளி யிடப்பட்டது. அப்போலோ மருத்துவக் குழும நிறுவனர் பிரதாப் ரெட்டி, மருத்துவர்கள் அனந்தகிருஷ்ணன், சின்னசாமி, சுனில் ஷெராப், கோபால் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x