Published : 14 Jun 2016 11:00 AM
Last Updated : 14 Jun 2016 11:00 AM

புனையப்பட்டதா புகார்?- எழுத்தாளர் துரை குணா மீதான வழக்கில் திடீர் திருப்பம்

'எழுத்தாளர் துரை குணா மீது தான் போலீஸில் புகார் கொடுக்கவே இல்லை' என அவரால் தாக்கப்பட்டு காயமடைந்ததாகக் கூறப்படும் சிவானந்தம் கூறியிருப்பது, இவ்வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குலத்திரன்பட்டு கிராமத்தை சேர்ந்த தலித் எழுத்தாளரான துரை குணா அண்மையில் கைது செய்யப்பட்டார்.

கரம்பக்குடி போலீஸார் அவரை கைது செய்தனர். பண பரிவர்த்தனை தொடர்பாக துரை குணாவும், மரப் பொருட்களை விற்கும் அவரது நண்பர் கார்த்திகேயனும் இணைந்து சிவானந்தம் என்பவரை தாக்கியதாக கரம்பக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜூன் 9-ம் தேதி இரவு படுகாயங்களுடன் சிவானந்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

இதன் அடிப்படையிலேயே, துரை குணா மற்றும் கார்த்திகேயன் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 341, 294 (பி), 323, 324, 506 (2) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கில் முக்கிய நபரான சிவானந்தம் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "எழுத்தாளர் துரை குணா மீது நான் போலீஸில் புகார் கொடுக்கவே இல்லை. கரம்பக்குடி போலீஸார் துரை குணாவை பழி தீர்த்துக் கொள்ள என்னை பயன்படுத்திக் கொண்டுள்ளனர்" என்றார்.

எவிடன்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவன அலுவலகத்திலிருந்து அவர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

கண்ணுக்கு தெரியும் காயம் இல்லை:

போலீஸார் கூறியதுபோல் சிவானந்தத்தின் கைகளிலும், உள்ளங்கையிலும் வெளிப்படையாக கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு எவ்வித காயமும் இல்லை. இது ஒருபுறம் இருக்க துரை குணா பற்றி தான் கேள்விப்பட்டதுகூட இல்லை எனக் கூறுகிறார் சிவானந்தம். ஆனால், கார்த்திகேயன் தனது உறவினர் என ஒப்புக்கொள்கிறார்.

சிவானந்தம் மேலும் கூறும்போது, "கார்த்திகேயனின் மரச்சாமான் கடையில் இருந்து 6 மாதங்களுக்கு முன்னதாக நான் சில வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கியிருந்தேன். அவருக்கு நான் ரூ.50,000 தர வேண்டியிருந்தது. அதில் ரூ.42,000 திரும்பச் செலுத்திவிட்டேன். மீத தொகையை அளிக்குமாறு என்னிடம் கார்த்திகேயன் வலியுறுத்தி வந்தார். நான் விரைவில் தருவதாகக் கூறியிருந்தேன்.

இந்நிலையில், கரம்பக்குடி போலீஸ் எஸ்.ஐ மெய்யப்பன் என்னை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் ஒரு வெற்றுத் தாளில் என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார். அடுத்த நாளே துரை குணாவும், கார்த்திகேயனும் கைது செய்யப்பட்டது எனக்குத் தெரியவந்தது. மேலும், என்னிடம் கையெழுத்து பெற்ற வெற்று காகிதத்தில் குணா, கார்த்திகேயனுக்கு எதிராக புகார் எழுதி அவர்கள் இருவரையும் போலீஸார் சிறைக்கு அனுப்பினர் என்பதை புரிந்து கொண்டேன்" என்றார்.

துரை குணா கைது சம்பவம் குறித்து எவிடன்ஸ் என்.ஜி.ஓ. இயக்குநர் கதிர் நம்மிடம் கூறும்போது, "கரம்பக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் களை கட்டிய சாராய விற்பனையை துரை குணா அம்பலப்படுத்திவந்தார். இந்நிலையில் ஒரு தலித் இளைஞரை (சிவானந்தத்தை) வைத்தே மற்றொரு தலித் இளைஞரான துரை குணா மீது மிகச் சாதுர்யமாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்" என்றார்.

இது தொடர்பாக புதுக்கோட்டை எஸ்.பி. சந்தோஷ் ஹதிமணியிடம் கேட்டபோது, "மருத்துவமனை கோப்புகளில் சிவானந்தம் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், சிவானந்தத்திடம் கரும்பக்குடி போலீஸார் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினரா என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார்.

எழுத்தாளர் துரை குணா யார்?

2014ஆம் ஆண்டு "ஊரார் வரைந்த ஓவியம்" என்ற பெயரில் துரை குணா புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அதில் தலித் மக்கள் மீது பிற சாதியினர் நடத்தும் ஒடுக்குமுறை குறித்து விரிவாகப் பதிவு செய்திருந்தார்.

இதையடுத்து அவருக்கு அச்சுறுத்தல் வந்ததால், தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனக் கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையை அணுகினார். இது தொடர்பாக கறம்பக்குடி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அதே ஆண்டு அக்டோபர் மாதம் அவரது தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையில் குணா புகார் அளித்திருந்தார். தாங்கள் ஊருக்குள் நுழைய விடாமல் தடுக்கப்படுவதாகவும் அவர் அதில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x