Published : 27 Aug 2016 10:17 AM
Last Updated : 27 Aug 2016 10:17 AM

சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுமதி வழங்கினால் கரூர் மாவட்டத்திலிருந்து வெளியேறுவோம்

சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கம் முடிவு



*

கரூர் மாவட்ட விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க செயலாளர் எம்.ராமலிங்கம் பேசும்போது, கரூர் மாவட்டத்தில் சாயக்கழிவு பிரச்சினையைத் தீர்க்க கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து போராடி வருகிறோம். சாயக்கழிவு பாதிப்பால் நீரில் 3 ஆயிரம், 4 ஆயிரம் டீடிஎஸ் (டோட்டல் டிஸ்சால்வ்டு சால்டு நீரில் கலந்துள்ள உப்பின் தன்மை) உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன், கருப்பம்பாளையம் பகுதியில் உள்ள நிறம் மாறி இருந்த கிணற்று நீரை ஆய்வு செய்தப்போது 8 ஆயிரம் டீடிஎஸ்ஸும், மற்ற கிணறு களில் 5 ஆயிரம் டீடிஎஸ்ஸும் இருந்தன.

சாயக்கழிவால் நிலத்தடி நீர் மட்டம், மண்ணின் தன்மை கெட்டுப்போய்விட்டது. கரூர் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிணறுகளின் தண்ணீர் பாழ்பட்டுவிட்டது. இப்படியே போனால் விவசாயிகள் வாழவே முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

இதற்காக பல முறை, பல போராட்டங்களை நடத்தி விட்டோம். நீதிமன்ற இழப்பீடு நொய்யல் பகுதிக்கு தான் வழங்கப்பட்டது. அமராவதி பாசன பகுதி விவசாயிகளுக்கு வழங்கவில்லை.

கரூர் மாவட்டத்தில் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு (சிஇடீபி காமன் எப்ளூயண்ட் ட்ரீட்மெண்ட் ப்ளான்ட்) அனுமதி வழங்கினால் விவசாயிகள் மாவட் டத்தை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழி இல்லை. பூஜ்ய கழிவு வெளியேற்றம் எனக்கூறி செயல்படும் சாயப்பட்டறைகள், ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட வெளியேற்றாமல் பூஜ்ய கழிவு வெளியேற்ற முறைப்படி செயல்படவேண்டும் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் மு.அருணா, திட்ட இயக்குநர் கோமகன், வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) பா.ஜெயந்தி, கோட்டாட்சியர்கள் கரூர் ஜெ.பாலசுப்பிரமணியம், குளித்தலை சக்திவேல், விவசாயி கள் மகாதானபுரம் ராஜாராம், கோபாலதேசிகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x