

சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.24,040-க்கு விற்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்முறையாக ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3,000-ஐ தாண்டியுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,962-க்கும், ஒரு பவுன் ரூ.23,696-க்கும் விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.43 என பவுனுக்கு ரூ.344 உயர்ந்தது. இதனால், 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,005-க்கும், ஒரு பவுன் ரூ.24,040-க் கும் விற்கப்பட்டது.
இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3,048-க்கு விற்பனையானது. 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3,000-ஐ தாண்டியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
கடந்த சில ஆண்டுகளாக மற்ற துறை களைவிட தங்க முதலீடு பாதுகாப்பானதாக இருப்பதால், உலகம் முழுவதும் தங்கத் தில் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கத்தில் முதலீடு 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
‘செப்டம்பர் வரை உயரும்’
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள முக்கிய வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டம் நியூயார்க்கில் சமீபத் தில் நடந்தது. வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி உயர்த்தப் படுவது குறித்த முக்கிய அறிவிப்பு இக்கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், தற்போதுள்ள வட்டியே செப்டம்பர் வரை தொடரும் எனவும், அதற்கு பிறகுதான் வட்டி உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப் பட்டது. இதன் காரணமாக, சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள் தங்கத் தில் முதலீடு செய்ததால், தங்கத்தின் தேவை அதிகரித்து விலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 3 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.3,000-ஐ தாண்டியுள்ளது. செப்டம்பர் வரை தங்கம் விலை மேலும் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.