

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் நீதித்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய 7 வழக்கறிஞர்கள் மீதான தமிழ்நாடு பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை செப்டம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைக் கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி, மதுரையைச் சேர்ந்த 2 வழக்கறிஞர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, வழக்கறிஞர்கள் எஸ்.ஜிம்ராஜ் மில்டன், எஸ்.பார்த்தசாரதி, எஸ்.மகேந்திரன் உள்ளிட்ட 7 பேர் சென்னை உயர் நீதிமன்ற அறைக்கு வெளியே நின்று நீதித்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அந்த நீதிமன்ற அறைக்குள் நுழைய முயன்றதோடு, நீதிமன்ற பணிகளுக்கு இடையூறாகவும் நடந்துகொண்டனர். இதனால், அவர்கள் மீது தானாக முன்வந்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு பார்கவுன்சில், ஒழுங்கு நடவடிக்கை முடிவடையும் வரை அவர்கள் அனைவரும் வழக்கறிஞர்களாக தொழில் செய்ய இடைக்கால தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட் டது.
இந்நிலையில், அவர்கள் 7 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை தமிழ்நாடு பார் கவுன்சில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஒத்திவைத்தது.
இதற்கிடையே, கட்டாய தலைக்கவச உத்தரவை எதிர்த்து போராடிய மதுரை வழக்கறிஞர்கள் 5 பேர் நிரந்தரமாக தொழில்புரிய தடை விதித்து நேற்று முன்தினம் கர்நாடக பார்கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.