

கச்சத்தீவு பிரச்சனைக்கு மூடு விழா நடத்தியவரே திமுக தலைவர் கருணாநிதிதான் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
முன்னதாக கச்சத் தீவு பிரச்சினையில் தமிழக அரசை மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
கச்சத்தீவு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, "எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசும்போது கச்சத் தீவு பிரச்சினையில் தமிழக அரசை மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
கச்சத் தீவு காவு கொடுக்கப்பட்டதை தடுக்க எதையுமே செய்யாமல் மவுனம் சாதித்து விட்டு, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட பிறகு, பெயரளவிலே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி கச்சத் தீவு பிரச்சனைக்கு மூடு விழா நடத்தினார் கருணாநிதி.
அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய கருணாநிதி, "ஜூன் மாதம் 27 ஆம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கிறேன். இது பற்றி எந்த விதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அறிவிக்கவில்லை. 27-ஆம் தேதி பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப் போய் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன். ..." என்று கூறியிருக்கிறார்.
ஆனால், கருணாநிதியின் தலைமையில் "டெசோ" அமைப்பின் சார்பில்15.4.2013 அன்று நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கச்சத் தீவு குறித்த தீர்மானத்தில், "1974 ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தான போது, குறைந்த பட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும் அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று கழக அரசு வலியுறுத்தி அந்த ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் எது உண்மை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தான் விளக்க வேண்டும்" என்றார்.