

விசாகப்பட்டினத்திலிருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 195 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் இருந்து சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் நிலையத்துக்கு நேற்று காலை 6.30 மணிக்கு வந்தது. அப்போது ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சகாயராஜ், தலைமைக் காவலர்கள் குமரேசன், பாண்டி ஆகியோர் கொண்ட குழுவினர் ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ரயிலில் இருந்து இறங்கிய 2 பேர் தலையில் மூட்டைகளை சுமந்தபடி சென்று கொண்டிருந்தனர். சந்தேகம் அடைந்த போலீஸார், அவர்களிடமிருந்த 3 மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். அதில் 95 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், அவர்களை கைது செய்தனர். விசாரணையில், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒச்சப்பன் (46), உசிலம்பட்டியைச் சேர்ந்த கோபால் (21) என்பதும், விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வருவதும் தெரியவந்தது.
இதேபோல சென்னை டிபி சத்திரம் பழைய கல்லறைச் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற டிபி சத்திரம் போலீஸார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கார்த்தி (26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.