Published : 02 Jan 2014 06:52 PM
Last Updated : 02 Jan 2014 06:52 PM

கோவை: எரியாத தெருவிளக்குகளை எரிய வைக்கிறதா எஸ்.எம்.எஸ்?

எரியாத தெருவிளக்குகள் குறித்து பொதுமக்கள் எஸ்.எம்.எஸ் மூலம் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினால், மின்பொறி யாளர்கள் அதை சரிசெய்வர் என்று சமீபத்தில் கோவை மாநகராட்சி அறிவித்தது. இந்த உத்தியே, தற்போது எரியாத தெருவிளக்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது என்று புகார் எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சியின், பழைய 60 வார்டுகளில் மொத்தம் சுமார் 40 ஆயிரம் தெருவிளக்குகளும், புதிதாக இணைக்கப்பட்டுள்ள 40 வார்டுகளில் சுமார் 20 ஆயிரம் தெருவிளக்குகளும் உள்ளன. இதில், பழைய வார்டுகளில் உள்ள தெருவிளக்குகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் பழுதுநீக்கி பராமரிக்கப்படுகிறது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 40 வார்டுகளில் தெருவிளக்குகள் மின்வாரிய ஊழியர்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது.

இந்த தெருவிளக்குகள் எரியவில்லை என்றால் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மத்திய மண்டல வார்டுகளின் மக்கள் முறையே 0422 - 2310419, 0422 - 2235658, 0422 - 2235658, 0422 - 4233642, 0422 - 2573336 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. அந்தந்த வார்டுக்கு நியமிக்கப்பட்டுள்ள மாநகராட்சி பொறியாளர்களிடம், இது தொடர்பான புகார்களை தெரிவிக்க அவர்களின் மொபைல்போன் எண்களும் அறிவிக்கப்பட்டு 38 பேரின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டன.

இந்த மொபைல்போன்கள் மட்டுமல்ல, புகார் மைய தொலைபேசி எண்களில் சரியான விளக்கம் கொடுக்காவிட்டாலோ, புகாரை பதிவு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டாலோ, மொபைல்போன்களை பல நாட்களாக தொடர்பு கொள்ள முடியாவிட்டாலோ மாநகராட்சி ஆணையரிடம் புகார் செய்யலாம் என்றும் அறிவிக்கப்படது.

இதுதான் இப்போது தலைவலியாக மாறியுள்ளதோடு, ஒப்பந்ததாரர்களும், அந்தந்த பகுதி பொறியாளர்களும் முறைகேடு செய்யவும் வழிவகுக்கிறது என்கின்றனர் கவுன்சிலர்கள். இதுகுறித்து ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருவர் கூறியது:

'ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஒப்பந்ததாரர் வீதம் பராமரிப்புப் பணி செய்யப்படுகிறது. இவர்கள் எரியாத விளக்குகளை பழுதுநீக்க ஒரு வார்டுக்கு மாதத்தில் 2 முறை வருவார்கள். ஆனால், இந்த எஸ்.எம்.எஸ். திட்டம் வந்தபிறகு, வார்டுவாரியாக முறை வைத்து வரவேண்டிய தெருவிளக்கு பழுது நீக்குபவர்கள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஒரு சில தெருவிளக்குகளை மட்டுமே சரிசெய்கின்றனர். பழுதான விளக்குகள் குறித்து வார்டுதோறும் சென்று கண்காணிப்பதும் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x